மழைநீரில் கிடக்கும் செல்வராஜின் டூவீலர்.
மழைநீரில் கிடக்கும் செல்வராஜின் டூவீலர்.

சோகம்... மழைநீரில் அறுந்து விழுந்த மின்வயர்... அரசு ஊழியர் உயிர் பறிபோன பரிதாபம்!

கோவையில் தேங்கி இருந்த மழை நீரில் மின்சார வயர் அறுந்து விழுந்ததால், இரு சக்கர வாகனத்தில் சென்ற அரசு ஊழியர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் கோவை மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் கணினி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை பணி முடிந்து செல்வராஜ் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கோவை மாநகரம் முழுவதும் நேற்று பரவலாக பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது.

லங்கா கார்னர் பகுதி அருகே செல்வராஜ் வந்தபோது, அங்கு தேங்கி இருந்த மழைநீரில் தவறி விழுந்து அசைவற்றுக் கிடந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்தவர்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த செல்வராஜ்
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த செல்வராஜ்

தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது, மழை நீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்து, மின்சாரத்தை நிறுத்தினர். இதன் பின்னர் பாதுகாப்பு உபகரணங்களுடன் செல்வராஜை மழை நீரிலிருந்து மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

செல்வராஜின் உடலை மீட்டு போலீசார் விசாரணை அனுப்பி வைத்தனர்.
செல்வராஜின் உடலை மீட்டு போலீசார் விசாரணை அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த செல்வராஜுக்கு வளர்மதி என்ற மனைவியும், கிரிஸ்வந்த்(10) என்ற மகனும் உள்ளனர். தேங்கி நின்ற மழை நீரில் மின்சார வயர் அறுந்து கிடந்தது தெரியாமல், இரு சக்கர வாகனத்தில் சென்றதால் செல்வராஜ் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு ஊழியர், தேங்கி நின்ற மழை நீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in