ஒரே ஆண்டில் நாட்டில் 47,221 போக்சோ வழக்குகள்; உத்தர பிரதேசம் முதலிடம்: மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்!

ஒரே ஆண்டில் நாட்டில் 47,221 போக்சோ வழக்குகள்; உத்தர பிரதேசம் முதலிடம்: மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்!

2020-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 47,221 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மத்திய அரசு இன்று மக்களவையில் தெரிவித்துள்ளது.

போக்சோ சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசனின் கேள்விக்கு பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் மாநில வாரியாகத் தொகுக்கப்பட்ட தரவுகளை வழங்கினார். இதில் 2020-ம் ஆண்டில் 6,898 போக்சோ வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 5,687 வழக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், மத்தியப் பிரதேசம் 5,648 வழக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

அமைச்சர் அளித்த தரவுகளின்படி, உத்தரப் பிரதேசத்தில் தண்டனை விகிதம் 70.7% ஆகவும், மகாராஷ்டிராவில் 30.9% மற்றும் மத்தியப் பிரதேசத்தில் மற்றும் 37.2% ஆகவும் தண்டனை விகிதம் இருந்தது. மறுபுறம், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 100% தண்டனை விகிதம் கொண்ட மாநிலமாக மணிப்பூர் உள்ளது. 2020-ம் ஆண்டின் இறுதியில் நாட்டில் 170,000 போக்சோ வழக்குகளின் விசாரணை நிலுவையில் இருப்பதாகவும், இது 2018-ல் (108,129) இருந்ததை விட 57.4% அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டில் லடாக் மற்றும் சண்டிகர் போக்சோ வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை எனவும், கோவா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான போக்சா குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டம் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக 389 பிரத்யேக நீதிமன்றங்கள் உட்பட 1,023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்தை நீதித்துறை செயல்படுத்தி வருகிறது எனவும் அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in