சடலத்தைப் பாதுகாக்க நாள் ஒன்றுக்கு ரூ.5,000 வசூல்!- அம்பலத்திற்கு வந்த அரசு மருத்துவமனை மோசடி!

சடலத்தைப் பாதுகாக்க நாள் ஒன்றுக்கு ரூ.5,000 வசூல்!- அம்பலத்திற்கு வந்த அரசு மருத்துவமனை மோசடி!
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ள ஃபீரிசர் பாக்ஸ் வேலை செய்யாததைக் காரணம் காட்டி தனியாரிடம் ஃபீரிசர் பாக்ஸ்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. ஃபீரிசர் பாக்ஸில் சடலத்தை வைக்க அவர்களின் உறவினர்களிடமிருந்து நாள் வாடகையாக ரூ.5000 வசூல் செய்யப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அண்ணா அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தினமும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து செல்கிறார்கள். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் மருத்துவமனை பிணவறையில் உள்ள குளிரூட்டிகள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக வேலை செய்யவில்லை. இதனால் விபத்தில் உயிரிழப்பவர்களின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யாமல் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மே மாதம் முழுக்க சுமார் 12 நபர்கள் விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் இறந்துள்ளனர். இறந்தவர்களின் சடலங்கள் குளிரூட்டி வேலை செய்யாத பிணவறையில் வைக்கப்படுகின்றன. இதனால் சடலங்கள் அழுகி துர்நாற்றம் அப்பகுதி முழுக்க வீசிவருகின்றது.

செயல்படாத பிணவறை குளிரூட்டி
செயல்படாத பிணவறை குளிரூட்டி

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு , அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவருக்கு தெரியாமல் இறந்து போன இருவரின் உடல்களைத் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஒருவரிடமிருந்து, ஃபிரீசர் பாக்ஸை வாடகைக்கு எடுத்து அதில் சடலத்தை வைத்துள்ளனர். இதற்காக இறந்தவர்களின் உறவினர்களிடமிருந்து நாளொன்றுக்கு 5000 ரூபாய் வரை பேரம் பேசி, சுமார் 20 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த முறைகேட்டிற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினரும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கைலாஷ், நீங்கள் செய்வது சட்டப்படி குற்றம் என மருத்துவமனை ஊழியர்களை எச்சரித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் கொண்டு வரப்படும் சடலங்கள் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவதால், உறவினர்கள் சடலங்களைப் பெறுவதற்குப் பெரிதும் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in