உஷார்... உங்கள் மீதும் வழக்குகள் பாயலாம்... 9 சிம்கார்டுகளுக்கு மேல் உள்ளதா?

செல்போன் மற்றும் சிம் கார்டுகள்
செல்போன் மற்றும் சிம் கார்டுகள்

சைபர் கிரைம் மோசடிகளைத் தடுக்கவும், தவிர்க்கவும் அரசு முன்னெடுக்கும் அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாக, மொத்தமாக சிம் கார்டுகள் விற்பனையாவது மற்றும் ஒரே பெயரில் எண்ணிக்கையில் அதிகமான கார்டுகள் வைத்திருப்பது ஆகியவை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

மோசடி கும்பல்களின் நடவடிக்கைகளுக்கு சிம் விற்பனை செய்யும் டீலர்களில் ஒரு சிலரும் உடந்தையாகி வருவதால், அவர்களைக் கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவற்றின் அங்கமாக சைபர் மோசடிகள் மற்றும் மோசடி அழைப்புகளுக்கு காரணம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கடந்த சில மாதங்களில் சிம் கார்டுகளை விற்பனை செய்யும் 67,000 டீலர்கள் அரசின் தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், ஒன்பதுக்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகளை வைத்திருக்கும் நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இணைய மோசடி
இணைய மோசடி

தேசம் தழுவிய சைபர் கிரைம் மோசடிகளை அரங்கேற்றும் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மட்டும், 9 இணைப்புகளைத் தாண்டிய சந்தாதாரர்களின் 17 ஆயிரம் கூடுதல் சிம் கார்டுகள் அண்மையில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. போலி ஆவணங்கள் மூலம் பெறப்படும் சிம் கார்டுகள் வாயிலான இணைய மோசடிகளைத் தடுக்க, சிம் கார்டுகளை விற்பனை செய்யும் முகவர்களிடம் தொலைத்தொடர்புத் துறை கெடுபிடி நடைமுறைகளை அமல்படுத்துகிறது.

இவை உட்பட மோசடி மொபைல் இணைப்புகளைத் தடுப்பதற்கான சமீபத்திய முயற்சிகளின் வாயிலாக 67 ஆயிரம் சிம் டீலர்கள், 52 லட்சம் இணைப்புகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் மோசடிப் புகார்களின் அடிப்படையில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறை எஃப்ஐஆர் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

 மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

இவை தொடர்பான விளக்கங்களை வழங்கியுள்ள மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மோசடிகளுக்கு உடந்தையாக இருக்கும் சிம் டீலர்களுக்கு ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இவற்றுக்கு அப்பால் நிறுவனங்களுக்கு மொத்தமாக சிம் இணைப்புகளை வழங்கும் வழக்கமான செயல்முறைகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறையை ’கேஒய்சி’ எனப்படும் வாடிக்கையாளரை அறிந்து கொள்வதற்கான செயல்பாடுகளுடன், ஆதார் மற்றும் க்யூ ஆர் கோட் உடன் ஒருங்கிணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், அரசு, பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் சார்ந்த துறைகளின் மொத்த சந்தாதாரர்களுக்கு, மேற்படி கூடுதல் சரிபார்ப்புகளில் விலக்கு அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in