
திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகில் பழுதாகிய லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பழநியில் இருந்து திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, அய்யலூர் தங்கம்பட்டி அருகே லாரி பழுதடைந்ததால் அதனை ஓரமாக நிறுத்த டிரைவர் மெதுவாக ஓட்டிச்சென்றுள்ளார். நள்ளிரவு சமயம் என்பதால் பின்னால் வந்த அரசு பேருந்து ஓட்டுநருக்கு லாரி மெதுவாக செல்வது தெரியவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மீது அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய லாரி சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டதில் 14 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.