சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்... சென்னை போலீஸார் அதிரடி!

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சில நாட்களுக்கு முன்பு யூடியூபர் சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்டார்.

சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் தேனி போலீஸார் நடத்திய சோதனையின் முடிவில் அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீஸார் சீல் வைத்தனர். அவர் வீட்டில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் யு டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்திய சோதனைக்குப் பின்னர் சென்னை சைபர் கிரைம் போலீசார் 7வதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறையில் அடைக்க சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சி.எம்.டி.ஏ அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கரை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை கோவை சிறை அதிகாரிகளிடம் சென்னை காவல்துறையினர் வழங்கினர்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

இதுகுறித்த சென்னை காவல்துறையின் செய்திக் குறிப்பில், சவுக்கு சங்கர் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 3 வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும், மீதமுள்ள 2 வழக்குகள் விசாரணைக்கான நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் போலீசார் இது தொடர்பான ஆவணங்களை கோவை போலீசாரிடம் வழங்கினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in