`திமுக ஆட்சி வந்ததால்தான் இந்தத் தீர்ப்பாவது கிடைத்தது'

கோகுல்ராஜ் தாயார் கண்ணீர் பேட்டி
`திமுக ஆட்சி வந்ததால்தான் இந்தத் தீர்ப்பாவது கிடைத்தது'

``கொலை நடந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் நாங்கள் செத்துச் செத்துத்தான் பிழைத்தோம். இந்த (திமுக) ஆட்சி வந்ததால்தான் இந்த தண்டனையாவது கிடைத்தது" என்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா கண்ணீர் மல்க கூறினார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் மற்றும் அவரது டிரைவர் அருண் ஆகியோருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதைத் தொடர்ந்து கோகுல்ராஜின் தாயார் சித்ராவிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

உறவினர்களுடன் நீதிமன்றம் வந்த கோகுல்ராஜ் தாயார்.
உறவினர்களுடன் நீதிமன்றம் வந்த கோகுல்ராஜ் தாயார்.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

குற்றவாளிகளுக்கு நாங்கள் தூக்குத் தண்டனை கேட்டோம். தூக்குத் தண்டனை இல்லாவிட்டாலும் இதுவும் கொடூர தண்டனைதான். இந்த மாதிரி கொடூரமான கொலை செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும். என் பையனுக்கு வந்த நிலைமை இனிமேலும் யாருக்கும் வரக்கூடாது. இந்த கொலை நடந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் நாங்கள் செத்துச் செத்துத்தான் பிழைத்தோம். இந்தத் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வழக்கை நடத்த உதவிய அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன், சிபிசிஐடி போலீஸார், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆகியோருக்கு நன்றி. என் மகன் தற்கொலை செய்துகொண்டான் என்று பொய் சொன்னபோது, உடலை பரிசோதனை செய்து இது கொடூரமான கொலைதான் என்று சொன்ன அரசு டாக்டருக்கும் நன்றி. முதல்வர் அவர்களுக்கும் நன்றி. இந்த (திமுக) ஆட்சி வந்ததால்தான் இந்த தண்டனையாவது கிடைத்தது. ஏனென்றால் இந்த வழக்கு என்ன ஆகப் போகுதோ என்று நாங்கள் எல்லாம் பயந்தோம். ஸ்டாலின் அவர்கள் வெறுமனே முதல்வராக இல்லாமல் ஏழைகளுக்காக ஆட்சி நடத்துகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in