`யுவராஜ் கருணை மனுவே போட முடியாது; 10 பேருக்கும் ஆயுள் முழுவதும் சிறைதான்'

அரசு தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் பேட்டி
`யுவராஜ் கருணை மனுவே போட முடியாது; 10 பேருக்கும் ஆயுள் முழுவதும் சிறைதான்'

``கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள தீரன் சின்னமலை இளைஞர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் ஆயுள் வரையில் சிறையில்தான் இருப்பார்கள். அவர்களுக்கு பிணை கிடைக்காது. சட்டப்படி கருணை மனுவும் போட முடியாது'' என்று சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்துள்ளார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை விவரம் குறித்து மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு வழக்கறிஞர் மோகன். ``நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இருக்கிற அர்த்தநாரீஸ்வரர் மலையில், கோகுல்ராஜ் அவருடைய கல்லூரித் தோழி சுவாதியுடன் பேசிக்கொண்டிருந்தார். சுயஜாதி பெருமையைப் பேசுவதற்கும், அதைக் காப்பாற்றுவதற்கும் மாவீரன் தீரன் சின்னமலை பெயரில் அமைப்பை ஏற்படுத்தி நடத்திவரும் யுவராஜ் தரப்பினர், கோகுல்ராஜ் பட்டியலினத்தவர் என்பதற்காகவும், அவர் தங்கள் ஜாதியைச் சேர்ந்த சுவாதியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த காரணத்திற்காகவும் அவரைத் திட்டமிட்டு, கடத்திச் சென்றுள்ளனர்.

அவரிடம் இருந்து செல்போனைப் பிடுங்கிவிட்டு சாதி வன்மத்தோடு அவரை கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு அவரைக் கடத்திச்சென்றுள்ளார்கள். பிறகு சங்கிரி அருகே இது தற்கொலைதான் என்று அவரையே பேசவைத்தும், எழுதவைத்தும் பதிவு செய்திருக்கிறார்கள். அன்று இரவிலே தொட்டிப்பாளையம் பகுதிக்குக் கொண்டுசென்று கொடூரமான முறையில் கழுத்தை வெட்டி, தலையைச் சிதைத்து பக்கத்திலே போட்டுவிட்டு நாக்கை வெட்டி உடம்பை மட்டும் தண்டவாளத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளார்கள்.

இந்தச் சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர் போலீஸார், முதலில் ஆளைக் காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்தார்கள். ரயில்வே போலீஸாரோ சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தார்கள். இந்த 2 வழக்குகளையுமே அந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியா புலன்விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். ராமச்சந்திரா பேராசிரியர் டாக்டர் சம்பத் குமார் அவர்களை இந்த வழக்கில் இணைத்து, கோல்குராஜின் உடல் பரிசோதனை செய்தபோது இது தற்கொலை அல்ல, திட்டமிட்ட படுகொலை என்று உடல் கூறாய்வு அறிவிக்கை தெரிவித்தது.

இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள சதீஷ், ஸ்ரீதர், செல்வராஜ், சந்திரசேகரன், இறந்து போனவர் ஆகிய அத்தனை பேருமே யுவராஜோடு மலைக்குச் சென்று சதி செய்துதான் அவரைக் கடத்திக்கொண்டுபோய் அங்கே திட்டமிட்டு, பல சாட்சிகளை மறைத்துவிட்டு, கொடூரமான முறையில் கொலைசெய்திருக்கிறார்கள் என்கிற விவரம் வெளிவந்தது. இதன் பிறகே இந்த வழக்கு எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கையை மாற்றிப் பதிவு செய்து டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா விசாரித்தார்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலை பேரவை நிறுவன தலைவர் யுவராஜ் காவல்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, வருவதாகச் சொல்லிவிட்டு தப்பிவிட்டார். இந்த வழக்கை விசாரித்த விஷ்ணுப்பிரியா துரதிருஷ்டவசமாக தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு பதிவு செய்த நாளில் இருந்து 100 நாட்களாக தலைமறைவாக இருந்த யுவராஜ், பத்திரிகைகளுக்கும் டிவிகளுக்கும் பேட்டிக்கு மேல் பேட்டி கொடுத்துவிட்டு பிறகுதான் சரணடைந்தார். அதன் பிறகே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த குற்றப்பத்திரிகையில் சதி செய்தல், ஆள் கடத்தல், கொலைக்காக ஆளைக் கடத்துதல், உடமைகளைப் பறித்தல், போலியாக நம்பர் பிளேட்டை மாற்றுதல், சாட்சியங்களை மறைத்தல், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பட்டியின இளைஞரை திட்டமிட்டு 9 மணி நேரம் தங்கள் கஸ்டடியில் வைத்து சித்ரவதை செய்து, சாதியைச் சொல்லி அடித்து, இரவு 9 மணிக்குக் கொண்டுபோய் தலையை வெட்டி கொலை செய்திருக்கிறார்கள் என்று அந்த குற்றப்பத்திரிகை சொன்னது. இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தால் இயல்பாகவே குற்றவாளிகள் எல்லோரும் பெயிலில் வெளியே வந்துவிட்டார்கள். ஆனால், நீதிமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டதால் இவர்களது பிணை ரத்து செய்யப்பட்டது. மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

அப்போதுதான் இறந்த கோகுல்ராஜின் தாயார் சித்ரா, தனக்கு சிறப்பு வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று சொல்லி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். ஆனால், அந்த மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனிடையே கோகுல்ராஜின் தோழியான சுவாதி பிறழ் சாட்சியாக மாறினார்.

இதைத் தொடர்ந்து சித்ரா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில் என்னை நீதிமன்றமே அவரது சிறப்பு வழக்கறிஞராக நியமனம் செய்தது. 72 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். வழக்கு மதுரை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அப்படியிருந்தும் இங்கே நீதிபதி பணியிடம் காலியாக இருந்ததால், வேறுவேறு கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டு 4 நீதிபதிகளை கடந்த பிறகு, இறுதியாக மாண்புமிகு நீதியரசர் சம்பத்குமார் அவர்களிடம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அவர் முறையாக விசாரித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார். அந்தத் தீர்ப்பிலே குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில் 10 பேர் குற்றவாளி என்றும், 5 பேர் விடுதலை என்றும் சொல்லியிருந்தார். தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலை செய்தல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சாகும் வரையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கு 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மொத்தம் 3 ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையில் இருந்து அவர் எந்தவித விலக்கோ, பிணையோ கோர முடியாது. இறுதி மூச்சுவரையில் அவர் சிறையில் இருக்க வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி தண்டனை பெற்றுள்ளதால், அவர் கருணை மனுவே போட முடியாது. மற்றவர்களுக்கு குற்றத்தின் தன்மையைப் பொறுத்து இரட்டை மற்றும் ஒற்றை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றாலும் அவர்கள் அனைவருமே இறுதி வரை ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதுபோன்ற குற்றவாளிகள் வெளியில் இருந்தால், சமூகத்தில் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடக்க வாய்ப்பிருப்பதால் பச்சிசிங் வழக்கை மேற்கோள் காட்டி இவர்களுக்கு பிணை கொடுக்கக்கூடாது, கருணை மனுவும் போட முடியாது என்று தீர்ப்பு வந்துள்ளது. எனவே, இவர்கள் 10 பேருமே ஆயுள் முடியும் வரையில் சிறையில்தான் இருப்பார்கள்.

கண்ணகி நீதி கேட்டு போராடிய இந்த மண்ணில் ஒரு பட்டியலின இளைஞனின் படுகொலைக்கு நல்ல தீர்ப்பு வந்துள்ளது. நீதிபதிக்கும், எங்களுக்கு உதவியாக இருந்த அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 5 பேருக்கும் தண்டனை கோரி மேல் முறையீடு செய்வது தொடர்பாக, வழக்கின் தீர்ப்பை முழுமையாகப் படித்த பிறகு முடிவெடுப்போம்'' என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in