ரெண்டு பேரையாச்சும் தூக்குல போட்டிருக்கணும்!

சட்டப் போராட்டத்தை விவரிக்கும் கோகுல்ராஜ் குடும்பம்
சித்ரா
சித்ரா

வாழவேண்டிய மகனொருவனை சாதிய வன்கொடுமைக்கு பழிகொடுத்துவிட்டு நிற்கும் ஓமலூர் கோகுல்ராஜ் குடும்பம் கடந்த 7 ஆண்டுகளாக பட்ட கஷ்ட நஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வழக்கின் தீர்ப்பு நாள் வரை தங்களை உயிருடன் விட்டு வைத்திருப்பார்களா என்ற அச்சம் அவர்களைச் சூழ்ந்திருந்தாலும் அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் உறுதியுடன் நின்று சட்டப் போராட்டத்தில் ஜெயித்திருக்கிறது அந்தக் குடும்பம்.

கோகுல்ராஜை மீட்டுக் கொண்டுவரமுடியாது போனாலும், சட்டம் தந்திருக்கும் தீர்ப்பு அந்தக் குடும்பத்துக்கு சற்றே ஆறுதலையும் தேறுதலையும் தந்திருக்கிறது. மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கேட்டு கண்ணீர்விட்டுக் கதறினார் கோகுல்ராஜின் தாய் சித்ரா. அந்தக் கண்ணீரில் அவரது 7 வருடத்து சோகம் கரைந்து கிடந்தது.

நீதிமன்ற விசாரணைக்காக இதற்கு முன்பு மதுரை சென்று திரும்பிய போதெல்லாம் சித்ராவுக்குள் இனம் புரியாத ஒருசோகம் அப்பிக் கிடக்கும். ஆனால், இம்முறை அந்த சோகத்தை எல்லாம் தொலைத்துவிட்டு கம்பீரமாக சொந்த ஊரில் கால்பதித்தார். காரணம், சட்டப் போராட்டத்தில் அவருக்குக் கிடைத்திருக்கும் ஆத்மதிருப்தியான நீதி.

சித்ரா, கலைச்செல்வன்
சித்ரா, கலைச்செல்வன்

தீர்ப்புக்கு மறுநாள் காலையில் நாம் கோகுல்ராஜ் வீட்டில் இருந்தோம். இந்த வழக்கில் உரிய நீதி கிடைத்ததற்கு மீடியாக்களின் ஆவண சாட்சியமும் முக்கியம். அதை அந்தக் குடும்பம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது என்பதை அவர்கள் நம்மை வரவேற்ற விதத்திலிருந்தே உணரமுடிந்தது. சித்ரா தனது மனக்குமுறலை எல்லாம் மதுரை கோர்ட் வாசலிலேயே கொட்டிவிட்டதால் கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன் நம்மிடம் பேசினார்.

“பெருசா வசதியான குடும்பமெல்லாம் இல்லீங்க... அப்பா வெங்கடாசலம் டிரான்ஸ்போர்ட்டுல டிரைவரா இருந்தார். நம்மளப் போல பிள்ளைங்க கஷ்டப்படக் கூடாதுன்னு அப்பா நினைச்சார். அதனால என்னையும், தம்பியையும் தனியார் பள்ளியில படிக்க வெச்சார். எங்களை ஆளாக்க மெனக்கிட்டு உழைச்சார். அப்படியெல்லாம் உழைச்சவர், 2006-ல் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அதுக்கப்புறம் எங்கள சுமக்கிற பொறுப்பு அம்மா தலையில விழுந்துருச்சு. அப்பாவோட பென்ஷன வெச்சு குடும்ப செலவுகள சமாளிக்க முடியல. அதனால, காலேஜ் கேன்டீன்ல எல்லாம் வேலை பார்த்தாங்க அம்மா. ‘நம்ம படிச்சு வேலைக்குப் போய்ட்டா அம்மாவை வேலைக்கு அனுப்ப வேண்டாம்ல’ன்னு அப்பவே கோகுல் சொல்லுவான்.

சித்த மருத்துவம் படிக்கணும்கிறதுதான் கோகுலோட விருப்பம். ஆனா, உடனடியா வேலைக்குப் போகமுடியாதுன்றதால அத மாத்திக்கிட்டு இன்ஜினீயரிங் படிச்சான். அந்த சமயத்துல தான், கூடப் படிச்ச சுவாதி அவனுக்கு ஃபிரெண்ட் ஆனாங்க. அவங்களுக்குள்ள காதல் இல்லைன்னு எங்களுக்குத் தெரியும். அது வெறும் நட்புத்தான்.

கொலை செய்யப்பட்ட அன்னைக்கி, காலேஜ்ல டி.சி வாங்குறதுக்காக காலையில ஏழு மணிக்கெல்லாம் வீட்டைவிட்டுக் கெளம்பிட்டான் கோகுல். நான் கெளம்புறதுக்குக் கொஞ்சம் லேட் ஆனதால அவன் மட்டும் தனியா கெளம்பிட்டான். அவன் செல்லமா வளர்த்த அலெக்ஸ் பாண்டியனும் (கோகுல்ராஜ் பிரியமாய் வளர்த்த நாய்) பஸ் ஸ்டாப் வரைக்கும் போயிருச்சு. அம்மாவுக்குப் போன்போட்டு, அதைக் கூட்டிட்டுப் போகச் சொன்னான்.

கோகுல்ராஜ் வீடு
கோகுல்ராஜ் வீடு

காலேஜ் போன புள்ள டயத்துக்கு வராததால அம்மா போன் போட்டுருக்காங்க. ஆனா, கோகுல் போனை எடுக்கல. கொஞ்ச நேரத்துல சுவாதியோட நம்பர்லருந்து அம்மாவுக்கு போன். ஆனா, வழக்கு விசாரணை சமயத்துல, ‘கோகுல்ராஜ் யாருன்னே எனக்குத் தெரியாது’ன்னு அந்தப் பொண்ணு சொல்லிருச்சு. அந்தப் பொண்ணு என்ன பண்ணும்... அது அவங்காளுங்களுக்கு சப்போர்ட்டா தானே பேசும்.

அதுக்குப் பின்னால நடந்த சம்பவங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். நாமக்கல் நீதிமன்றத்துல 2018 ஆகஸ்ட் மாதம் விசாரணை தொடங்குச்சு. ஆறாவது சாட்சி விசாரணை நடக்கும் போதே எங்களுக்கு திருப்தி இல்லாமப் போச்சு. அதுமட்டுமில்லாம, ஏகப்பட்ட அச்சுறுத்தல்களும் எங்களுக்கு வர ஆரம்பிச்சுது. யுவராஜும், அவங்க ஆளுங்களும் கோர்ட்டுக்கு வரும்போது பெரிய கும்பலே வந்து நிக்கும். அந்தக் கும்பலைப் பார்த்தாலே எங்களுக்காக சாட்சி சொல்ல வர்றவங்க மிரண்டுருவாங்க.

என் தம்பிய துள்ளத் துடிக்க கொன்னுட்டு கோர்ட்டு விசாரணைக்கு வர்றப்ப மீசைய முறுக்கி விட்டுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே வருவார் யுவராஜ். அதப் பாத்துட்டு எங்க அம்மா பலமுறை கோர்ட் வாசல்ல மண்ணை வாரி தூத்திருக்காங்க. அதுக்கெல்லாம் தான் இப்ப நியாயம் கிடைச்சிருக்கதா நினைக்கிறேன். தொடர்ச்சியா எங்களுக்கு அச்சுறுத்தல் இருந்ததால வழக்கை வேற நீதிமன்றத்துக்கு மாத்தணும்னு உயர் நீதிமன்றத்துல மனு போட்டோம். அதை ஏத்துக்கிட்டு வழக்கு விசாரணையை மதுரைக்கு மாத்துனாங்க.

கலைச்செல்வன்
கலைச்செல்வன்

கேஸ் மதுரைக்கு மாறுன பின்னாடி யுவராஜ் தரப்பு ஆட்கள் கோர்ட்டுக்கு கூட்டமா வர்றது குறைஞ்சிருச்சு. ஆனாலும் அச்சுறுத்தல் குறையல. விசாரணைக்காக மதுரைக்கு போயிட்டு பஸ்லதான் நாமக்கல்லுக்கு திரும்புவோம். பெரும்பாலும் ராத்திரி ஆகிடும். அந்த சமயங்கள்ல பஸ் நாமக்கல் பாலம் ஏறி இறங்கும் போது நிறுத்தமே இல்லாத இடத்துல பஸ்ஸை மறிச்சு பத்துப் பதினைஞ்சு பேர் பஸ்ஸுக்குள்ள ஏறுவாங்க. அவங்க இடுப்புல கத்தி சொருகிருப்பாங்க. அது எங்க கண்ணுல படுற மாதிரி எங்களுக்கு முன்னாடி வந்து நிப்பாங்க. பைக்குள்ள வெச்சிருக்கிற ஆயுதங்கள வேணும்னே தவறவிட்டு எங்கள மிரட்டுவாங்க. என்ன நடக்குமோன்ற பயத்துல தான் நாங்க பஸ்ஸுக்குள்ள உக்காந்துருப்போம்.

இது விஷயமா போலீஸுக்கு ஆன்லைன்ல மட்டும் புகார் பண்ணிட்டு விட்டுட்டோம். ஆனா, அதுக்குப் பின்னாடியும் மிரட்டல் ஓயல. எங்க சொந்தக்காரங்க மூலமாவே அழுத்தம் குடுக்க ஆரம்பிச்சாங்க. ‘செத்தவன் திரும்பி வரவா போறான்’னுகூட பேசுனாங்க. ஆனாலும் நாங்க பின்வாங்கல. செத்தாலும் சாவோம்னு தான் வழக்கு விசாரணைக்கு போயிட்டு வந்தோம்.

கோகுல்ராஜ்
கோகுல்ராஜ்

எங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அர்த்தநாரீஸ்வரர் கோயில்ல இருந்துதான் தம்பி கோகுலைக் கடத்திட்டுப் போனாங்க. இந்த வருசம் எங்க வீட்டுக்கு அர்த்தநாரீஸ்வரர் படம்போட்ட காலண்டர் வந்துச்சு. அந்தப் படத்தை வெச்சு அம்மா பூஜை செஞ்சுட்டே இருந்தாங்க. ஆண்டவன் நின்று கொல்வான்னு சொல்றது தம்பி கேஸ்ல உண்மையாகி இருக்கு.

இந்த நேரத்துல, எதுக்கும் அஞ்சாம வழக்கை நடத்துன வழக்கிறஞர் ப.பா.மோகன், வழக்கறிஞர் பார்த்திபன் ரெண்டு பேருக்கும் நன்றி சொல்லணும். ஏழு வருசம் இந்த வழக்குல இழுபட்டுக்கிட்டு இருந்ததால எங்களால வேற எதைப் பத்தியும் யோசிக்க முடியல. வருமானம் இல்லாததால கையில மடியில இருந்த நகைகள வித்துத்தான் கேஸை நடத்துனோம் அதனால எங்களோட இயல்பு வாழ்க்கை அடியோட மாறிப்போச்சு. உண்மையச் சொல்லணும்னா... நாங்க நிம்மதியா தூங்கி ஏழு வருசமாச்சு” என்று பெருமூச்சுவிட்டார் கலைச்செல்வன்.

கோகுல்ராஜ்
கோகுல்ராஜ்

மகன் சொன்னதை எல்லாம் கண்ணீர் கசிய கேட்டுக் கொண்டு பக்கத்தில் அமர்ந்திருந்த கோகுல்ராஜின் அம்மா சித்ரா, “சுவாதியும், கோகுலும் காதலிச்சிருந்தாங்கன்னா அந்தப் பொண்ணு கோர்ட்டுல மாத்திச் சொல்லாம உண்மையச் சொல்லி இருக்கும். தருமபுரி இளவரசன் கொலை வழக்கு சம்பந்தமான செய்திகள டிவியில பாக்குறப்பெல்லாம், ‘இப்டியெல்லாம் கூட நடக்குமாம்மா?’ன்னு எம்புள்ள என்கிட்ட கேட்பான். கடைசியில, அவனுக்கே இப்படியொரு கொடுமை நடந்துருச்சு. நீதிமன்றம் குடுத்திருக்கிற தீர்ப்பை மதிக்கிறோம்ங்க. ஆனா. ரெண்டு பேரையாச்சும் தூக்குல போட்டிருந்தாங்கன்னா இனிமே இப்படியொரு காரியத்தைச் செய்ய யாருக்கும் துணிச்சல் வராது. எம் புள்ளயோட ஆத்மாவும் சாந்தி அடைஞ்சிருக்கும்” என்று சொல்லிவிட்டு சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

கோகுல்ராஜ் படுகொலையால் நிம்மதியைத் தொலைத்துவிட்டு நின்ற இந்தக் குடும்பம் இனியாவது இயல்புக்குத் திரும்பட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in