`காதலியின் புகைப்படத்தை அழிக்க பாஸ்வேர்டு கொடுக்கணும்'- காதலனுக்கு கறார் உத்தரவு

`காதலியின் புகைப்படத்தை அழிக்க பாஸ்வேர்டு கொடுக்கணும்'- காதலனுக்கு கறார் உத்தரவு

இணையத்தில் ரகசியமாக சேமித்து வைத்திருக்கும் காதலியின் புகைப்படங்களை அழிக்க போலீஸாரிடம் கடவுச்சொல்லை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நாகர்கோவில் இளைஞருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் செய்யது முகமது. இவர் மீது நாகர்கோவில் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில், ‘தானும் செய்யது முகமதுவும் காதலித்தோம். அப்போது இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்தோம். தற்போது அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக செய்யது முகமது மிரட்டுகிறார்’ என கூறியிருந்தார்.

இதையடுத்து போலீஸார் வழக்கு பதிந்து செய்யது முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், "இதுவரை எந்த புகைப்படங்களையும் மனுதாரர் சமூக வலைதளங்களில் வெளியிடவில்லை. மனுதாரர் மீது வேறு எந்த வழக்கும் இல்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும்" என்றார்.

போலீஸ் தரப்பில், "மனுதாரர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடவில்லை. இருப்பினும் இணையத்தில் தனி கடவுச்சொல் போட்டு புகைப்படங்களை மறைத்து வைத்துள்ளார்’ எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் போலீஸாரிடம் கடவுச் சொல்லை (பாஸ்வேர்டு) வழங்க வேண்டும். அதை பயன்படுத்தி மனுதாரர் இணையத்தில் மறைத்து வைத்துள்ள புகைப்படங்கள், வீடியோக்களை விசாரணை அதிகாரி அழிக்க வேண்டும். மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் சாட்சியங்களை அழிக்கக்கூடாது. கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை தலைமறைவாகக்கூடாது. இதை மீறினால் மனுதாரருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை கீழமை நீதிமன்றம் ரத்து செய்யலாம்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in