12 வயதேயான பள்ளி மாணவியை, ஒரு தலைக்காதலால், மாணவியின் தாய் கண் முன்பாகவே அடுத்தடுத்து 10 முறை கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், கல்யாண் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதித்யா காம்ப்ளே(20). இவர் அப்பகுதியைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவியை ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார். இதையறிந்த மாணவியின் தாய், ஆதித்யாவை கண்டித்துள்ளார். இந்நிலையில் மாணவி நேற்று மாலை வழக்கம் போல ட்யூஷன் சென்றுள்ளார். இதன் பின்னர் அவர் தனது தாயாருடன் வீட்டிற்கு வந்தார்.
அப்போது மாணவியின் வீட்டு படிக்கட்டு பகுதியில் மறைந்திருந்த ஆதித்யா, மாணவியின் தாயைக் கீழே தள்ளி விட்டார். இதன் பின் கத்தியால் மாணவியை பத்து முறை வெறித்தனமாக குத்தினார். இதில் படுகாயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து பினாயிலைக் குடித்து ஆதித்யா தற்கொலைக்கு முயன்றார். அவர் மீது கோல்சேவாடி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாய் கண் முன்பாகவே பள்ளி மாணவி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.