ஏஆர்டி ஜூவல்லர்ஸ் ஓனர்களுக்கு கஞ்சா சப்ளை! சிக்கிய காவலரிடம் தீவிர விசாரணை!

ஏஆர்டி ஜூவல்லர்ஸ் உரிமையாளர்கள்
ஏஆர்டி ஜூவல்லர்ஸ் உரிமையாளர்கள்

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏஆர்டி ஜூவல்லர்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான ஆல்வினிடமிருந்து போதை மாத்திரை, கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சிறை கைதிகளுக்கு போதை மாத்திரை, கஞ்சா சப்ளை செய்த சிறை காவலரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

புழல் சிறை
புழல் சிறை

சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வந்த ஏஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடமிருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிறுவன உரிமையாளர்கள் ஆல்வின், ராபர்ட் உள்ளிட்டோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு சிறை அதிகாரிகள் ஏஆர்டி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ஆல்வின் அறையில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ஏஆர்டி ஜூவல்லர்ஸ்
ஏஆர்டி ஜூவல்லர்ஸ்

புழல் சிறையில் பணியாற்றி வரும் சிறை காவலர் திருமலை நம்பிராஜன் என்பவர் விசாரணை கைதி ஆல்வினுக்கு போதை மாத்திரை, கஞ்சா சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறை அதிகாரிகள் காவலர் திருமலை நம்பிராஜனை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் வெளியே இருந்து போதை மாத்திரை, கஞ்சா ஆகியவற்றை வாங்கி வந்து விசாரணை கைதிகளுக்கு விற்பனை செய்து வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் சிறை காவலர் திருமலை நம்பிராஜன் பல மாதங்களாக யாருக்கும் தெரியாமல் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சிறைத்துறை நிர்வாகம் சார்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறை காவலர் திருமலை நம்பிராஜனிடம் அதிகாரிகள் துறைரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பின்னர் அவரை பணியிடை நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புழல் சிறையில் காவலர் ஒருவர் போதை வஸ்துக்களை சப்ளை செய்து சிக்கி கொண்ட சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in