‘சீரியல் கில்லர்’ சார்லஸ் சோப்ராஜ் சிறையிலிருந்து விடுதலை

நேபாள உச்ச நீதிமன்றம் உத்தரவு
‘சீரியல் கில்லர்’ சார்லஸ் சோப்ராஜ் சிறையிலிருந்து விடுதலை

நேபாள சிறையில் அடைபட்டிருக்கும் சார்லஸ் சோப்ராஜை விடுதலை செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று(டிச.21) உத்தரவு பிறப்பித்தது. சோப்ராஜ் வயோதிகத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் நேபாள நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எழுபதுகளில் தெற்காசியாவை மையமாக வைத்து சார்லஸ் சோப்ராஜ் நிகழ்த்திய தொடர் கொலைகள் உலகையே கிடுகிடுக்க வைத்தவை. ஹிப்பி கலாச்சாரத்தில் ஊறிய மேற்கு நாட்டின் சுற்றுலா பயணிகள், இயற்கை அழகில் திளைக்கவும், ஆன்மிக அனுபவத்தில் இளைப்பாறவும் தெற்காசிய நாடுகளுக்கு பயணித்தனர். அவர்களிடம் நம்பிக்கை பெறும் வகையில் பழகி, மெல்லக்கொல்லும் விஷம் தந்து, அப்படி கொலைக்கு ஆளானவர்களின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஆள் மாறாட்டத்தில் உலகம் முழுக்க பறந்து, புதிய குற்றங்களை வெவ்வேறு நாடுகளில் நிகழ்த்தி.. என சார்லஸ் சோப்ராஜின் குற்றத் தாண்டவங்கள் நீண்டவை.

சார்லஸ் சோப்ராஜ் நிகழ்த்திய கொலைகளில் 12 மட்டுமே சட்டத்தின் முன்பாக நிரூபணமாகி இருக்கின்றன. நிதர்சனத்தில் 30க்கும் மேற்பட்ட கொலைகள் சோப்ராஜ் குற்ற சரிதையில் இருக்கின்றன. தாய்லாந்தில் சோப்ராஜின் முதல் கொலைக்கு ஆளான பெண் சுற்றுலா பயணி பிகினி ஆடை அணிந்திருந்ததில், ’பிகினி கில்லர்’ என்ற செல்லப் பெயரும் சோப்ராஜ்க்கு சேர்ந்தது. உறவாடிக் கெடுக்கும் நயவஞ்சகம் என்பதற்கு புதிய பொழிப்புரை எழுதிய சோப்ராஜின் வாழ்க்கை, ஏராளமான ஆவணப் படங்கள், திரைப்படங்கள் மற்றும் வலைத்தொடர்களாக வந்திருக்கின்றன.

’தி செர்பன்ட்’ வலைத்தொடர்
’தி செர்பன்ட்’ வலைத்தொடர்

அவற்றில் பிபிசி - நெட்ஃபிளிக்ஸ் கூட்டு தயாரிப்பில் உருவாகி கடந்தாண்டு ஏப்ரலில், நெட்ஃபிளிக்ஸில் வெளியான ’தி செர்பன்ட்’ வலைத்தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. இது தவிர பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை வில்லன்களின் கதாபாத்திரத்தை சித்தரிப்பதில் சார்லஸ் சோப்ராஜின் கொலைகார வாழ்க்கை மிகவும் உதவியிருக்கிறது.

இந்திய தந்தைக்கும், வியட்நாம் தாய்க்கும் பிறந்த சார்லஸ் சோப்ராஜின் மோசமான குழந்தைப் பருவமே பிற்காலத்தில் கொடூர கொலைகாரனாக வளர்த்தெடுத்தது. பிரான்ஸ் தேசத்தின் குடியுரிமை பெற்ற சார்லஸ் சோப்ராஜ், இந்திய சிறையில் தண்டனைக் கைதியாய் 1976 முதல் 1997 வரை சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

இந்தியாவில் சோப்ராஜ்
இந்தியாவில் சோப்ராஜ்

விடுதலையானதும் ஓய்வுக்காக நேபாளம் சென்றபோது 2 அமெரிக்க சுற்றுலா பயணிகளை கொன்ற வழக்கில் கைதாகி 2003 முதல் அங்கு சிறைவாசம் அனுபவிக்கிறார். அவருக்கு தற்போது வயது 78. நேபாள உச்ச நீதிமன்றத்தின் படிகளில் சார்லஸ் சோப்ராஜ் சார்பானவர்கள் தொடர்ந்து படையெடுத்ததில் ஒருவழியாக விடுதலை சாத்தியமாகி இருக்கிறது.

சார்லஸ் சோப்ராஜை விடுதலை செய்வதாக அறிவித்த நேபாள உச்ச நீதிமன்றம், அடுத்த 15 நாட்களுக்குள் நேபாளத்தை விட்டு வெளியேறி பிரான்ஸ் செல்ல வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இதர நாடுகளுக்கு செல்வதாக இருப்பின், தனது கொலை திருவிளையாடல் நிகழாத தேசமாக பார்த்து சார்லஸ் சோப்ராஜ் பயணப்பட வேண்டியிருக்கும். தெற்காசியாவில் அது சற்று கடினமும்கூட!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in