
நகை சேமிப்பு திட்டத்தில் பணம் கட்டிய வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் சென்னையில் உள்ள ப்ரணவ் ஜுவல்லரி கடையில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை குரோம்பேட்டை பகுதியில் ப்ரணவ் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை செயல்பட்டு வந்தது. திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் மதன் என்பவர் இந்நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். மேலும் திருச்சி, மதுரை, நாகர்கோவில், ஈரோடு, பாண்டிச்சேரி, கும்பகோணம் ஆகிய இடங்களில் இதன் கிளைகள் உள்ளது. இந்நிலையில் ப்ரணவ் ஜுவல்லரி தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தால் அதிக லாபம் தருவதாக கூறி கவர்ச்சி விளம்பரங்கள் செய்ததை பார்த்து பொதுமக்கள் பலர் இதனை நம்பி தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
இதனிடையே, ப்ரணவ் ஜுவல்லரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி கடந்த 15ம் தேதி குரோம்பேட்டையில் உள்ள நகைக்கடை மற்றும் தமிழகத்தில் உள்ள 8 கிளைகளையும் எந்தவித முன்னறிவிப்பின்றி மூடியது. இதனையடுத்து இந்நிறுவனத்தில் முதலீடு செய்த 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் தகவல் அறிந்து நேற்று கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் இது குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அந்தந்த காவல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பலர் இன்று பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்ததன் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் குரோம்பேட்டையில் உள்ள ப்ரணவ் ஜுவல்லரி கடை திறந்து தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்நிறுவனம் தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. போலீஸார் விசாரணைக்கு பிறகு எவ்வளவு வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தியுள்ளனர், எத்தனை கோடி மோசடி நடந்துள்ளது என்பது குறித்து தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே அதிக வட்டி தருவதாக கூறி ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம், ஹிஜாவு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து இருந்து சுமார் 10 ஆயிரம் கோடி மேல் மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.