‘என் மகளைக் குச்சியால் அடித்தார்... என் வீட்டை நோக்கி சிசிடிவி கேமரா பொருத்தினார்!’

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மீது திலகவதி ஐபிஎஸ் மகன் சரமாரி புகார்
‘என் மகளைக் குச்சியால் அடித்தார்... என் வீட்டை நோக்கி சிசிடிவி கேமரா பொருத்தினார்!’

சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசிப்பவர் பிரபு திலக். மருத்துவரான இவர், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதியின் மகன் ஆவார்.

இந்நிலையில் பிரபு திலக், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமார் மீது அண்ணா நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கடந்த 2021 மே மாதம் தனது 12 வயது மகள் லிஃப்டில் வந்தபோது, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமார் நாயுடன் அதே லிஃப்ட்டில் வந்ததாகவும், அப்போது திடீரென நாய் தன் மகளைப் பார்த்து குரைத்ததால் பதறிபோன தன் மகள் நாயைக் கட்டுப்படுத்துமாறு கூறியதாகவும், அதற்கு விஜயகுமார் குச்சியை வைத்து மிரட்டியதுடன் லிஃப்டை விட்டு தன் மகளை வெளியே தள்ளியதாகவும் அந்தப் புகாரில் பிரபு திலக் தெரிவித்துள்ளார்.

இதனால் தன் மகள் மன உளைச்சல் அடைந்ததாகவும், இது குறித்து சிசிடிவி ஆதாரங்களுடன் அசோசியேஷனில் புகார் அளித்தபோது அவர்கள் விஜயகுமாரை எச்சரிக்கை செய்து அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ள பிரபு திலக், அசோசியேஷன் உறுப்பினர்கள் முன்பு தன் மகளுக்கு மனநல ஆலோசனை தேவை என விஜயகுமார் தெரிவித்ததால், தனது மகள் மேலும் மன உளைச்சல் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனது மகள் மட்டுமின்றி, தாய் திலகவதி உட்பட குடும்பத்தினர் அனைவரையும் விஜயகுமார் தகாத வார்த்தைகளால் பேசுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனிமனித உரிமை பறிபோகும் வகையில், விதியை மீறி விஜயகுமார் தனது வீட்டை நோக்கி சிசிடிவி கேமராவைப் பொருத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்டுவரும் விஜயகுமார் மீது உடனே வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.