
ஓசூரில் உள்ள மளிகைக் கடை ஒன்றில், மிளகில் பட்டாணி கடலை கலப்படம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், நாயக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜாராம். இவர் ஓசூரில் உள்ள ஒரு மளிகை கடையில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவது வழக்கம். வழக்கம் போல் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மளிகை கடையில் அரை கிலோ மிளகு பாக்கெட்டை வாங்கியுள்ளார். அதை வீட்டிற்கு சென்று பிரித்து பார்த்த போது, மிளகுடன் சேர்த்து பாதி அளவு பட்டாணி கலக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் ராஜாராம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அந்த மளிகை கடைக்கு சென்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த கடைக்காரரை எச்சரித்த அதிகாரிகள் பரிசோதனைக்காக கலப்படம் செய்யப்பட்ட மிளகுகளை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.