மூளையாக செயல்பட்ட பெண்கள்... காரில் வந்து பேருந்துகளில் கொள்ளை: ஸ்கெட்ச் போட்டு தூக்கியது நெல்லை போலீஸ்

மூளையாக செயல்பட்ட பெண்கள்... காரில் வந்து பேருந்துகளில் கொள்ளை: ஸ்கெட்ச் போட்டு தூக்கியது நெல்லை போலீஸ்

அரசுப் பேருந்துகளில் கூட்டநெரிசலில் குறிவைத்து பெண்களிடம் நகைகள் திருடும் தில்லாலங்கடி கும்பலை போலீஸார் கைது செய்தனர். ஐந்து பேர் கொண்ட இந்த கும்பலில் மூன்று பெண்கள் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.

திருநெல்வேலி, பாளையாங்கோட்டை செயின்ட் பால்ஸ் சாலையை சேர்ந்தவர் நம்பி. இவரது மனைவி கன்னுத்தாய்(55) இவர் மேலப்பாளையம் பகுதியில் இருந்து சந்தை ரவுண்டானா பகுதிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். பேருந்தை விட்டு இறங்கிப் பார்த்தபோது அவர் கழுத்தில் கிடந்த 14 கிராம் செயினைக் காணவில்லை. அப்போதுதான் பேருந்தில் சகபயணிபோல் பயணித்தவர்கள் திருடியிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், பேருந்து நிறுத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சோதனை செய்தனர். அதில் பேருந்து இருந்து இறங்கும் மூன்று பெண்கள் தயாராக இருந்த காரில் ஏறிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

அந்த கார் மதுரை பதிவெண் கொண்டதாக இருந்தது. திருநெல்வேலி பேருந்து நிறுத்தத்தில் இருந்து இறங்கும் பெண்கள், மதுரை பதிவெண் கொண்ட வண்டியில் சென்றது ஏன்? என்னும் அடிப்படையிலும், அது மாநகரப் பேருந்து என்பதால் இவர்கள் பேருந்துகளில் கொள்ளையடித்துவிட்டு தப்பிசெல்லும் கும்பலா என்னும் சந்தேகத்திலும் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்நிலையில் மாநகரம் முழுவதும் இருக்கும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டு அந்த கார் எண்ணும் அனைவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் அந்தக் கார் திருநெல்வேலி டவுணில் இருக்கும் நெல்லையப்பர் கோயில் வாசலில் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த காரை அதிரடியாக சூழ்ந்த போலீஸார் அதில் இருந்த 3 பெண்கள் உள்பட 5 பேரைக் கைது செய்தனர்.

அவர்களைக் கைது செய்த மேலப்பாளையம் போலீஸார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேட்டுப்பட்டி மஞ்சுமலை கோவில் தெருவைச் சேர்ந்த வெள்ளச்சாமி (47), அவரது உறவினர்கள் அதேபகுதியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, ஆறுமுகச் செல்வி, ஜீவா, ரஞ்சித் குமார் ஆகியோர் எனத் தெரியவந்தது. இந்தக்கும்பல் தினமும் மதுரையில் இருந்து கார் மூலம் நெல்லை வந்து, மாநகரப் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் பெண்கள் கழுத்தில் இருக்கும் செயினை அடிப்பதும், தொடர்ந்து செல்போன் மூலம் தகவல் கொடுத்ததும், காரிலேயே பேருந்து நிறுத்தம் வந்து ஆண்கள் அவர்களை பிக்கப் செய்து கொள்வதும் தொடர்ந்து சில மாதங்களாக நடந்துள்ளது. இந்த 5 பேர் கும்பலைக் கைது செய்த போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in