திடீரென பச்சை நிறமாக மாறிய நாகூர் தர்ஹா குளம்... மீன்கள் செத்து மிதந்ததால் மக்கள் அதிர்ச்சி!

நாகூர் தர்கா குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
நாகூர் தர்கா குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
Updated on
2 min read

திருப்பூர் நஞ்சராயன் குளம் மற்றும் நாகப்பட்டினம் நாகூர் தர்கா குளம் ஆகியவற்றில் மீன்கள் செத்து மிதப்பதால், பொதுமக்கள் குடிநீரை அருந்த அச்சமடைந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல மாதங்களாக காய்ந்திருந்த நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் பஞ்சத்திற்கு தீர்வு ஏற்படும் என மக்கள் நம்பி வருகின்றனர்.

ஆனால், பல இடங்களில் நீர்நிலைகளில் மாசு கலந்த நீர் கலக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிகப்படியான நீர் ஆறு, கால்வாய்களில் வரும் போது, அதனைப் பயன்படுத்திக் கொண்டு, சாயப்பட்டறை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் ஆகியவற்றை சிலர் இந்த நீரில் கலந்து வருகின்றனர்.

திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

இவ்வாறு கலக்கப்படும் நீரால், நீர்மாசு ஏற்படுவதோடு, அதில் இருக்கும் உயிரினங்களும் செத்து மிதப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக கோவையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

இந்த நீர் தற்போது திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் குளத்தில் சேகரமாகி வருகிறது. இந்நிலையில் இன்று காலை இந்த குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதைக் கண்ட அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நீரை பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயப்பட்டறை கழிவுகள் கலக்கப்பட்டதால் மீன்கள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

நாகூர் ஆண்டவர் தர்கா குளம்
நாகூர் ஆண்டவர் தர்கா குளம்

இதே போல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்காவில் ஏராளமானோர் வழிபட வருகை தருகின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்கள், கிறிஸ்துவர்களும் இங்கு வருகை தந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இவர்கள் மொட்டையடித்து, தர்கா குளத்தில் குளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் தர்கா குளத்தில் இன்று காலை மீன்கள் செத்து மிதப்பதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குளத்தின் நிறம் பச்சையாக மாறி நான்கு புறத்திலும் குவியல் குவியலாக மீன்கள் செத்து மிதக்கின்றன.

உள்ளூர் மீனவர்களைக் கொண்டு இறந்த மீன்களை அகற்றம்
உள்ளூர் மீனவர்களைக் கொண்டு இறந்த மீன்களை அகற்றம்

இதன் காரணமாக தர்கா குளம் மேற்கு, வடக்கு, தெற்கு, நூல்கடை தெரு, கலீபா சாஹிப் தெரு உள்ளிட்ட தெருக்கள் மட்டுமின்றி 1 கிலோ மீட்டர் தூரம்வரை துர்நாற்றம் வீசுகிறது.இது குறித்து அறிந்த நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் ஹுசைன்சாஹிப் தலைமையில் தர்கா நிர்வாகிகள் குளத்தில் உடனடியாக ஆய்வு செய்தனர். 10 மீனவர்களை கொண்டு சிறிய படகுகளை வைத்து மீன்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தால் மீன்கள் இறந்ததாகவும், விரைவில் குளம் தூய்மை செய்யப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் எனவும் தர்கா அறங்காவலர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in