தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கருப்பாநதி அணை பகுதியில் உள்ள வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டு தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் 20க்கும் மேற்பட்டோர் கடையநல்லூர் வனப்பகுதியில் செடி ,கொடி, தழைகளைக் கொண்டு காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் சுற்றித் திரிவதால், வன ஊழியர்கள் வனத்துக்குள் சென்று காட்டுத்தீயை அணைப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த தீயினால் அரியவகை மூலிகை செடிகளும், மரங்களும் தீயில் எரிந்து நாசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வனவிலங்குகள், உயிரினங்கள் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்படுவதாகவும், வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி விவசாயிகள் அச்சம் கொண்டுள்ளனர். எனவே வனத்துறையினர் காட்டுத் தீயை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.