'நடிகர் விஜய், ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும்'

டிஜிபியிடம் பால் முகவர்கள் சங்கம் புகார் மனு
'நடிகர் விஜய், ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும்'

"விஜய் ரசிகர்கள் மீதும், நடிகர் விஜய் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சென்னை காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு பால் முகவர்கள் சங்கம் மின்னஞ்சல் வாயிலாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் புகார் மனுவில், "பள்ளி, கல்லூரி மாணவர்கள், மெத்தப் படித்து, கைநிறைய சம்பாதிக்கும் இளம் தலைமுறையினர் பலரும் ஒருபுறம் மது, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை வஸ்துகளுக்கு அடிமையாகிக் கிடக்க மற்றொருபுறமோ திரை வெளிச்சத்தில் ஜொலிக்கும் முன்னணி நடிகர்களுக்காக தங்களது குடும்பத்தினர் நலனை மறந்து வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளாகவும், விட்டில் பூச்சிகளாகவும் மாறி தங்களின் எதிர்காலத்தை தொலைத்து வருவது மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது.

தமிழகத்தில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அத்திரைப்படங்கள் வெளியிடப்படும் திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கும் சம்பந்தப்பட்ட நடிகர்களின் பல அடி உயர கட்-அவுட்டுகளின் மீதேறி அதற்கு பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து, கற்பூர ஆரத்தி எடுத்து ரசிகர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில்தான் நடிகர் விஜய்யின் நடிப்பில் விரைவில் "பீஸ்ட்" திரைப்படம் வெளியாக இருப்பதால் அதனை கொண்டாட ரசிகர்கள் பலரும் கடந்த சில தினங்களுக்கு முன் ஒன்று திரண்டு அத்திரைப்பட கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேனில் பாலை நிரப்பி அதனை ஒரு கையால் தூக்கிக் கொண்டு "கரணம் தப்பினால் மரணம்" என்கிற நிலையில் தங்களின் குடும்பத்தினரைப் பற்றியோ அல்லது தங்களின் உயிரைப் பற்றியோ, அருகில் உள்ள சக ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் அவரவர் எதிர்காலம் குறித்தோ சிறிதளவுகூட கவலைப்படாமல் கட்-அவுட் மேலேறி நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்துள்ளனர்.

ஏற்கெனவே தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானபோது அவர்களின் கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்ய மேலே ஏறியபோது அவை சரிந்து விபத்து ஏற்பட்டதால் பல்வேறு தருணங்களில் சில ரசிகர்கள் உயிரிழந்ததோடு, பல ரசிகர்கள் கை, கால் உள்ளிட்ட பல உடல் உறுப்புகளை இழந்ததாக செய்திகள் அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

ஆனால் தங்களின் கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்து, மாலை, மரியாதை செய்த தனது ரசிகர்கள் மேலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாலும், உடல் உறுப்புகளை இழந்ததாலும் அவர்களின் குடும்பம் ஆதரவின்றி நிர்க்கதியாகிப் போனதை நினைத்து இதுவரை எந்த ஒரு முன்னணி நடிகர்களும் வருத்தப்பட்டதாகவோ அல்லது பாதிக்கப்பட்ட ரசிகர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்ததாகவோ தெரியவில்லை.

எனவே, கரணம் தப்பினால் மரணம் என்கிற மிகவும் ஆபத்தான நிலையிலும், அந்த கட்-அவுட் சரிந்தால் அருகில் உள்ள பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்த பின்னரும் நடிகர் விஜய்யின் "பீஸ்ட்" படத்தின் நூறடிக்கும் மேலான கட்-அவுட்டின் மேலேறி மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் மீதும், ரசிகர்களின் இந்த அஜாக்கிரதையான செயலை கண்டிக்காத, தனது ரசிகர்களை நல்வழிப்படுத்த தவறிய நடிகர் விஜய் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இனி வருங்காலங்களில் திரையரங்க வளாகங்களில் எந்த ஒரு நடிகர்களின் கட்-அவுட்டுகளின் மேலேறி மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்ய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in