`அப்பா இறந்துவிட்டார்; ரூ.1.73 கோடி தர மறுக்கிறார்'- நடிகர் விமலுக்கு எதிராக பெண் கண்ணீர் புகார்

`அப்பா இறந்துவிட்டார்; ரூ.1.73 கோடி தர மறுக்கிறார்'- நடிகர் விமலுக்கு எதிராக பெண் கண்ணீர் புகார்
தயாரிப்பாளர் ஹேமா கணேசன்

"மன்னர் வகையறா" படத்தின் தெலுங்கு உரிமையை தராமல் 1.73 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக தயாரிப்பாளர் ஹேமா கணேசன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திருப்பூர் கணேசனின் மகளும், சினிமா தயாரிப்பாளருமான ஹேமா கணேசன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது 1.73 கோடி ரூபாய் ஏமாற்றியதாக புகார் ஒன்றை இன்று அளித்துள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமா, "மன்னர் வகையறா" படத்தின் முதல் தயாரிப்பாளராக திருப்பூர் கணேசன் நடிகர் விமலுடன் ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த படத்தை 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ஒன்றரை கோடி ரூபாய் வரை கணேசன் முதலீடு செய்தார். பி்ன்னர் சில காரணங்களை காட்டி திருப்பூர் கணேசன் பட தயாரிப்பு பணிகளில் இருந்து விமல் மூலம் ஓரங்கட்டப்பட்டார். ஆனால் மன்னர் வகையறா படம் வெளியான போது திருப்பூர் கணேசனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் நடிகர் விமல் ஏமாற்றி விட்டார்.

ஏற்கெனவே திருப்பூர் கணேசனுக்கு மன்னர் வகையறா படத்தின் தெலுங்கு உரிமையை கொடுப்பதாக உறுதி அளித்த நடிகர் விமல் பின்னர் அந்த உரிமையை தனது தந்தைக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். `மன்னர் வகையறா' படத்தை முதன் முதலாக தொடங்கி தயாரித்த திருப்பூர் கணேசன், கரோனாவால் உயிரிழந்ததால் அவர் பல இடங்களில் வாங்கிய கடன் தொகைக்கு, அவருடைய வாரிசு என்ற அடிப்படையில், கடன் கொடுத்தவர்களுக்கு நான் பதில் சொல்லி கொண்டு வருகிறேன்" என கண்ணீர் மல்க கூறினார்.

ஏற்கெனவே வினியோகஸ்தர் கங்காதரன் நடிகர் விமல் மீது ரூ.2 கோடி ஏமாற்றியதாக புகார் அளித்த நிலையில் அதற்கு பின்னர் தயாரிப்பாளர் கோபி மற்றும் சிங்காரவடிவேலன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து தற்பொழுது ஹேமா புகார் அளித்துள்ளார். இவ்வாறு நடிகர் விமல் மீது அடுத்தடுத்து வரும் மோசடி புகாரால் அவர் கைதாவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.