
புதுச்சேரியில் பெண் போலீஸ் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் பத்துக்கண்ணு சப்தகிரி நகரைச் சேர்ந்தவர் வினோத்(30). மின்துறை ஊழியர்.இவரது மனைவி சத்யா (26). புதுவை காவல்துறையில் 6 ஆண்டுகளாக ஊர்க்காவல் படை காவலராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் நடந்த காவலர் பயிற்சி தேர்வு எழுதி, காவலராக தேர்வான இவர் ஆயுதப்படை பிரிவில் போலீஸாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் வினோத் திருபுவனையில் உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். தீபாவளியான நேற்று முன்தினம் காலை சத்யா குழந்தையை திருபுவனையில் உள்ள கணவர் வீட்டில் விட்டுவிட்டு திரும்பி தனது வீட்டுக்கு வந்தார்.
நேற்று வெகுநேரம் அவரது வீடு திறக்காததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து வில்லியனூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது சத்யா தனது வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
அவரது உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சத்யாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.