தாறுமாறாக ஓடிய ஆட்டோ: போதை ஓட்டுநரால் ஸ்ரீரங்கம் பெண்ணுக்கு நடந்த சோகம்

தாறுமாறாக ஓடிய ஆட்டோ: போதை ஓட்டுநரால் ஸ்ரீரங்கம் பெண்ணுக்கு நடந்த சோகம்
ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கத்தில் போதையில் தாறுமாறாக ஆட்டோவை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் சாலையோரமாக நடந்து சென்ற 60 வயது பெண் உயிரிழந்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் நேற்று இரவு தனது ஆட்டோவில் ஸ்ரீரங்கத்திலிருந்து அம்மா மண்டபம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையின் நடுவே தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளில் மோதியது. அதே நேரத்தில் எதிர் திசையில் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி பிரதீப்குமார் ஆட்டோ ஒட்டி வந்து கொண்டிருந்தார்.

நிலை தடுமாறிய ஆட்டோ மீது மோதாமல் இருக்க பிரதீப் குமார் தனது ஆட்டோவை வேகமாக திருப்பினார். அதனால் அந்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதைக்குள் புகுந்தது. அப்போது ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு 60 வயதான ராதா என்ற பெண்மணி நடைபாதையில் நடந்து வந்து கொண்டிருந்தார். கட்டுப்பாட்டை இழந்து வந்த ஆட்டோ அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர்களை மருத்துவமனைக்கு பொதுமக்கள் உதவியுடன் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த பெண்மணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.