அதிவேகமாக வந்த சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்... தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் யானை பலி!

ரயிலில் அடிபட்டு யானை உயிரிழப்பு
ரயிலில் அடிபட்டு யானை உயிரிழப்பு

கோவையில் ரயில் மோதி பெண் யானை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே இடத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 35 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இருந்து பாலக்காடு வரையிலான ரயில்வே தடத்தில் மதுக்கரை முதல் வாளையார் வரை உள்ள ரயில் பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது. இந்த பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் ரயில்களை 30 கிலோமீட்டர் வேகத்திற்கும் குறைவாக மட்டுமே இயக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் வனத்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் ரயில்வே நிர்வாகத்தின் அறிவுறுத்தலையும் தாண்டி சில ரயில் ஓட்டுநர்கள் அதிவேகத்தில் ரயில்களை இந்த பகுதியில் இயக்குவதால் யானைகள் ரயிலில் அடிபட்டு இருப்பது அதிகரித்து வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் இந்த பகுதியில் சுமார் 35-க்கும் மேற்பட்ட யானைகள் ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு மதுக்கரை பகுதியில் கருவுற்றிருந்த பெண் யானை உட்பட 3 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தன. இதையடுத்து ரயில்வே நிர்வாகம் சார்பில் ரயில் பாதையில் யானைகள் நடமாட்டத்தைக் கண்டறிய உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டது. மேலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யானையின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லும் வனத்துறையினர்
யானையின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லும் வனத்துறையினர்

இந்த நிலையில் இன்று அதிகாலை கேரள மாநிலம் வாளையார் அடுத்த பன்னிமடை ரயில்வே கேட் அருகே 15 மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று ரயில் பாதையை கடக்க முயன்றுள்ளது. அப்போது பாலக்காட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில், யானை மீது அதிவேகத்தில் மோதியது.

இதில் யானையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அந்த யானை அருகில் உள்ள நீரோடைக்கு சென்று அங்கே கீழே விழுந்து உயிருக்கு போராடியது. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, யானைக்கு சிகிச்சை அளிக்க முயன்ற போது யானை உயிரிழந்தது.

இதையடுத்து யானையின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக எடுத்து செல்ல வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இங்குள்ள 2 ரயில் பாதைகளில் 30 கிலோமீட்டர் குறைவாக மட்டுமே ரயில்களை இயக்க வேண்டும் என்ற ரயில்வே நிர்வாகத்தின் அறிவுறுத்தல் மீறப்பட்டிருப்பதே இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in