ராமேஸ்வரம் விரைவு ரயிலில் பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுக் கல்லூரி பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாரம் ஒருமுறை சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில், புதுக்கோட்டையை சேர்ந்த 26 வயதான பெண் வழக்கறிஞர் ஒருவர் கோவையில் இருந்து பயணம் செய்துள்ளார். அதே ரயிலில் சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்திர பிரசாத் (33) என்பவரும் திருப்பூரில் இருந்து பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை ரயில் கடந்து செல்லும் போது, திருச்சி ரயில் நிலைய சந்திப்பில் இறங்குவதற்காக சந்திர பிரசாத் தனது பைகளை எடுத்துள்ளார். அப்போது, 'தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக' சந்திர பிரசாத் மீது பெண் வழக்கறிஞர் ரயில்வே காவல்துறையில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் திருச்சி ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, சந்திர பிரசாத் திருச்சி சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, கல்லூரி நிர்வாகம் சந்திர பிரசாத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.