குழந்தையைத் தவிக்கவிட்டு 2-வது திருமணம்: ஊர் சுற்றிய மகளை வெட்டிக்கொன்ற தந்தை!

குழந்தையைத் தவிக்கவிட்டு 2-வது திருமணம்: ஊர் சுற்றிய மகளை வெட்டிக்கொன்ற தந்தை!

தூத்துக்குடியில் 2-வது திருமணம் செய்த மகளை அவரது தந்தையே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளத்தில் கருப்பசாமி கோயில் உள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயில் கொடை விழா நேற்று நடந்தது. இதற்காக பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் இக்கோயிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தனர். தாதன்குளத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. மகள் மீனா(21) கோயில் திருவிழாவிற்காக தனது சித்தி பார்வதி வீட்டுக்கு வந்திருந்தார். இரவு 9 மணியளவில் மீனாவின் தந்தை சுடலைமுத்து உள்ளிட்ட 5 பேர் பார்வதி வீட்டிற்கு வந்தனர். அங்கிருந்த மீனாவை வெட்டிக்கொலை செய்து தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் அருள் தலைமையிலான போலீஸார் தாதன்குளம் வந்து மீனா உடலைக் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதன் பின் அவர்கள் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " தாதன்குளத்தை சேர்ந்த சுடலைமுத்து தற்போது பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீனா கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இசக்கிப்பாண்டியன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இசக்கிப்பாண்டியனிடம் அவரது மகன் உள்ளார்.

இந்த நிலையில் நாங்குனேரி அருகே உள்ள பட்டப்பிள்ளை புதூரைச் சேர்ந்த முத்து என்பவரை 10 மாதங்களுக்கு முன்பு மீனா இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் பாளையங்கோட்டையில் தனி வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சுற்றுலா சென்று அந்த புகைப்படங்களை மீனா சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். முதல் திருமணம் செய்து குழந்தையையும், கணவரையும் விட்டு விட்டு இரண்டாவது கணவருடன் மீனா சுற்றியது அவரது தந்தை சுடலைமுத்துவிற்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக சுடலைமுத்து, அவரின் இரண்டாவது மனைவி முப்பிடாதி, மகன் மாயாண்டி, சுடலைமுத்துவின் அண்ணன் மனைவி வீரம்மாள், அவரது மகன் முருகன் ஆகியோருடன் சென்று இரண்டாவது திருமணம் குறித்து மீனாவிடம் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் மீனாவை சுடலைமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கழுத்து மற்றும் தலையில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே மீனா உயிரிழந்துள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வரவும், சுடலைமுத்து உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த கொலை குறித்து மீனாவின் சித்தி பார்வதி, செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார், இதன் பேரில் சுடலைமுத்து, மாயாண்டி, முப்பிடாதி, வீரம்மாள் ஆகியேரை கைது செய்து முருகனை தேடி வருகிறோம்" என்று தெரிவித்தனர். மகளை தந்தையே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.