மகள்களை அடித்துக் கொன்ற தந்தை…டார்ச்சரால் தற்கொலை செய்த மூத்த மகள்: காஞ்சிபுரத்தில் நடந்த பயங்கரம்!

கோவிந்தராஜ்.
கோவிந்தராஜ்.

டார்ச்சரால் மூத்த மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தனது 2 மகள்களையும் குடிபோதை வெறியால் தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன மதுரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள்.

வேலையில்லாத கோவிந்தராஜ், மதுவிற்கு அடிமையாய் இருந்துள்ளார். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல நேற்று மது போதையோடு கோவிந்தராஜ் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மனைவி கீதா வீட்டில் இல்லை. வழக்கம்போல் தகராறு செய்ததால் முதல் மகள் நந்தினி(16), 4-வது மகள் தீபா(10) ஆகியோர் கண்டித்துள்ளனர். இதனால் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.

குடிபோதையில் இருந்த கோவிந்தராஜ் கட்டையால் இருவரையும் தாக்கினார். அவர்கள் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் கோவிந்தராஜ் தாக்குதலால் சிறுமிகள் இருவரும் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து ஒரகடம் போலீஸார் விரைந்து வந்து, இரண்டு சிறுமிகளின் சடலங்களையும் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவிந்தராஜிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் கோவிந்தராஜின் தொல்லை தாங்க முடியாமல் அவரது மூத்த மகள் நதியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போதே கோவிந்தராஜ் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது இரண்டு குழந்தைகள் உயிரோடு தப்பியிருக்கும் என அப்பகுதி மக்கள் ஆதங்கப்பட்டனர். குடிபோதையில் தனது இரண்டு மகள்களை தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in