
விராலிமலை அருகே நான்கு வயது மகளுடன் தந்தை குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கட்டக்குடியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (34). இவரது மனைவி இவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாய் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்றிருந்த மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு பால்ராஜ் அழைத்திருக்கிறார். அதற்கு வர மறுத்த அவரது மனைவி தன்னை கணவன் கொலை செய்ய முயற்சிப்பதாக இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பால்ராஜை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
சில தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளிவந்த பால்ராஜ் விரக்தியில் காணப்பட்டார். துக்கத்தில் இருந்த பால்ராஜ் அவரது நான்கு வயது மகள் நிரஞ்சனாவுடன் நேற்று மாலை குளிக்க செல்வதாக கூறிவிட்டு ஊரில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளார். அவர் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை இருவரது உடல்களும் குளத்தில் மிதப்பதை கண்ட ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.