மகள் விவாகரத்து... பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் வீட்டிற்கு அழைத்து வந்த தந்தை

மகள் விவாகரத்து... பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் வீட்டிற்கு அழைத்து வந்த தந்தை

ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட கணவரிடம் விவாகரத்து செய்ய முடிவு செய்த மகளை மேளதாளத்துடன் வீட்டிற்கு தந்தை அழைத்து வந்துள்ள சம்பவம் ராஞ்சியில் நடந்துள்ளது.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் கைலாஷ் நகரை சேர்ந்தவர் பிரேம் குப்தா. இவரது மகள் சாக்சி. கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி சாக்சிக்கும் பஜ்ரா பகுதியை சேர்ந்த சச்சின் குமாருக்கும் திருமணம் நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநில மின் வாரியத்தில் இளநிலை இன்ஜினீயராக சச்சின் பணியாற்றி வருகிறார். திருமணத்துக்குப் பிறகு பஜ்ராவில் உள்ள வீட்டில் புதுமண தம்பதி வசித்து வந்தனர். ஆரம்பம் முதலே சச்சின் குமார், அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தன.

சில மாதங்களுக்கு முன்பு சாக்சியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சச்சின் குமாரும் அவரது குடும்பத்தினரும் வெளியூர் சென்றுவிட்டனர். சுமார் ஒரு மாதமாக அவர்கள் வீட்டுக்கு திரும்பவில்லை. வீட்டில் இருந்த மளிகை பொருட்களை வைத்து சமையல் செய்து சாக்சி சமாளித்தார். ஆனால் தனக்கு நேர்ந்த கொடுமையை தாய், தந்தையிடம் அவர் கூறவில்லை. ஒருநாள் சச்சின் குமாரின் லேப்டாப்பை சாக்சி பயன்படுத்தினார். அப்போது தனித்தனியாக இரு பெண்களுடன் சச்சின் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

இதுதொடர்பாக ரகசியமாக விசாரித்து சம்பந்தப்பட்ட இரு பெண்களிடமும் சாக்சி மொபைல் போனில் பேசினார். அப்போது சச்சினுக்கு ஏற்கெனவே இருமுறை திருமணமாகி இருப்பதும் 3-வதாக தன்னை திருமணம் செய்திருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சச்சின் குமாரை விவாகரத்து செய்ய சாக்சி முடிவு செய்தார். இந்த முடிவை தாய், தந்தையிடம் கூறினார். மகளுக்கு நேர்ந்த கொடுமையை அறிந்த பிரேம் குப்தா, மணமகன் குடும்பத்தினருக்கு தகுந்த பாடம் புகுத்த திட்டமிட்டார். சில நாட்களுக்கு முன்பு பஜ்ராவில் உள்ள சச்சின் குமாரின் வீட்டுக்கு சென்ற பிரேம் குப்தா தனது மகள் சாக்சிக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தார். வழிநெடுக பட்டாசு வெடித்து மகளின் விவாகரத்து முடிவை பெரும் விழாவாக கொண்டாடினார்.

இதுகுறித்து பிரேம் குப்தா கூறுகையில், "ஒரு தந்தை மகளை திருமணம் செய்து கொடுக்கும்போது பெரும் தொகையை செலவு செய்கிறார். பல கனவுகளை காண்கிறார். சில நேரங்களில் திருமணம் கசப்பான அனுபவமாக மாறிவிடுகிறது. எனது மகள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட துயரத்தை துடைக்கும் வகையில் அவரது விவாகரத்து முடிவை திருமண விழா போல கொண்டாடினேன். திருமணத்துக்குப் பிறகு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு அவர்களது பெற்றோர் உறுதுணையாக இருக்கவேண்டும். என்னை முன்னுதாரணமாக கொண்டு செயல்படுமாறு பெண்களை பெற்ற பெற்றோரை கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in