கஞ்சாவை தட்டிவிட்டதால் ஆத்திரம்... 2 குழந்தைகளுக்கு சூடு வைத்த தந்தை!

குழந்தைகளுக்கு சூடு வைத்த பெற்றோர்
குழந்தைகளுக்கு சூடு வைத்த பெற்றோர்

கஞ்சாவை தட்டிவிட்ட ஆத்திரத்தில் 2 குழந்தைகளுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய தந்தையை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவான தாயை தேடி வருகின்றனர்.

சென்னை தண்டையார்பேட்டை சாஸ்திரி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் டில்லி கணேஷ்(31). இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி யமுனா என்ற மனைவியும் 2 மற்றும் 4 வயதில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான டில்லி கணேஷ் தினமும் கஞ்சா வாங்கி வந்து வீட்டில் புகைத்து வந்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் டில்லி கணேஷ் கஞ்சா வாங்கி வந்து வீட்டில் புகைத்து வந்ததாக தெரிகிறது.

குழந்தைகளுக்கு சுடுவைத்த தந்தை டில்லிகணேஷ்
குழந்தைகளுக்கு சுடுவைத்த தந்தை டில்லிகணேஷ்BG

அப்போது வீட்டில் விளையாடி கொண்டிருந்த இரு ஆண் குழந்தைகளும் தந்தை டில்லி கணேஷ் மீது ஏறி விளையாட முயன்ற போது அவர் கையில் வைத்திருந்த கஞ்சாவை தட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டில்லி கணேஷ் உடனே ஒடி சென்று அடுப்பில் கரண்டியை காய வைத்து எடுத்து வந்து ஒரு குழந்தைக்கு தொடையிலும் மற்றொரு குழந்தைக்கு முட்டியிலும் சூடு வைத்துள்ளார். இதில் குழந்தைகள் இருவரும் வலியால் துடித்து கதறி அழுத சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் யமுனா, கணவன் குழந்தைகளுக்கு சூடு வைத்து சித்திரவதை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இரு குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இது குறித்து மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஆர்.கே.நகர் போலீஸார் டில்லி கணேஷ் மனைவியிடம் புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுனர் டில்லி கணேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சாவை தட்டிவிட்டதால் குழந்தைகளுக்கு சூடு வைத்த தந்தை கைது
கஞ்சாவை தட்டிவிட்டதால் குழந்தைகளுக்கு சூடு வைத்த தந்தை கைது

இதனை தொடர்ந்து குழந்தைகள் நல குழும அதிகாரிகள் இது குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தைகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஏற்கனவே குழந்தைகள் உடலில் சூடு வைத்த தழும்பு இருந்தது குறித்து விசாரித்த போது குழந்தையின் தாய் யமுனா சூடு வைத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இந்த தகவல் அறிந்து யமுனா தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து யமுனாவை போலீஸார் தேடி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in