சோகம்... சவுதியில் விபத்தில் உயிரிழந்த திருச்சி தொழிலாளி: உடலை மீட்டுத் தர குடும்பத்தினர் கோரிக்கை!

சவுதி அரேபியாவில் உயிரிழந்த ராஜசேகர்
சவுதி அரேபியாவில் உயிரிழந்த ராஜசேகர்

சவுதி அரேபியாவில் தோட்டவேலைக்காக சென்ற திருச்சியைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்ததையடுத்து, அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி வாழவந்தான் கோட்டை முல்லை வாசல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (43). இவர் திருச்சியில் கூலி வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சவுதி அரேபியாவில் தோட்ட வேலைக்காக சென்றிருந்தார். ஒரு வருட ஒப்பந்தம் முடிந்து மீண்டும் அதை புதுப்பித்து இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் அவர் அங்கு பணியாற்றி வந்தார்.

ராஜசேகர் குடும்பத்தினர்
ராஜசேகர் குடும்பத்தினர்

இந்நிலையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி பணி முடிந்து அறைக்கு திரும்பியபோது சாலையைக் கடக்க முயன்ற ராஜசேகர் மீது அவ்வழியே வந்த வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜசேகர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சவுதி அரேபியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல், அங்கு பணியாற்றும் நபர் மூலமாக குடும்பத்தினருக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜசேகரின் மனைவி ரோஸ்லின் மேரி தனது குடும்பத்தினருடன் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அதில், தனது கணவரின் மறைவிற்கான காரணம் தெரியாத நிலையில், அவரது உடலைச் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடமும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாடு சென்றவர், அங்கு விபத்தில் உயிரிழந்த சம்பவம் துவாக்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in