நான் யார் தெரியுமா?... பழனி முருகன் கோயிலில் நீதிபதி என உதார்விட்ட மோசடி ஆசாமி கைது!

கைது செய்யப்பட்ட மோசடி நபர் ரமேஷ் பாபு (53)
கைது செய்யப்பட்ட மோசடி நபர் ரமேஷ் பாபு (53)

பழனி முருகன் கோயிலில் மாவட்ட நீதிபதி எனக்கூறி சாமி தரிசனம் செய்ய வந்த மோசடி நபரை, போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர், முக்கிய அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள் ஆகியோர் வரும்போது அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

பழனி முருகன் கோயில்
பழனி முருகன் கோயில்

இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்ட ரமேஷ் பாபு என்பவர், தான் தர்மபுரி மாவட்ட நீதிபதி எனக் கூறியுள்ளார். பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருவதால், அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அவர் கூறியுள்ளார். இதையடுத்து நீதிமன்ற ஊழியர்களுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். நேற்று மாலை பழனி முருகன் கோயிலுக்கு கார் ஒன்றில் ரமேஷ் பாபு வருகை தந்துள்ளார். அப்போது அங்கிருந்த நீதிமன்ற ஊழியர்கள், முன்னுரிமை அனுமதி பெற கோயில் பணியாளர்கள் அடையாள அட்டையை கேட்பதாக தெரிவித்துள்ளனர்.

பழனி அடிவாரம் காவல் நிலையம்
பழனி அடிவாரம் காவல் நிலையம்

ஆனால் ரமேஷ் பாபு அடையாள அட்டையை தராமல், முன்னுக்கு பின் முரணாக தொடர்ந்து பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த நீதிமன்ற ஊழியர்கள், இது தொடர்பாக பழனி அடிவாரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீஸார் ரமேஷ் பாபுவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது ரமேஷ் பாபு மாவட்ட நீதிபதி அல்ல என்பதும், சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்கு மாவட்ட நீதிபதி எனக் கூறிக்கொண்டு, உள்ளூர் காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்து, இவ்வாறு சாமி தரிசனம் செய்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

நேற்று காலை தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் உள்ள மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலுக்கும், ராமலிங்கப்பட்டியில் உள்ள பாதாள செம்பு முருகன் கோயிலுக்கும் சென்று விட்டு மாலை மரியாதைகளுடன் அவர் வந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து மோசடி பேர்வழி ரமேஷ் பாபுவை கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் பழனி முருகன் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in