
மத்திய நிதியமைச்சகத்தில் இருந்து இணை செயலாளர் பேசுவதாக கூறி ஆள்மாறாட்டம் செய்த போலி ஐஏஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்தவர் நாகசுப்பிரமணியன் (57). இவர் சிஏ படிப்பு படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் வழக்கு ஒன்று மத்திய குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ளது. நீண்ட நாட்களாக அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படும் நிலையில் அந்த வழக்கை விரைந்து முடிக்க கட்டுமான நிறுவனம் நாக சுப்பிரமணியனை நியமித்தது.
இதனால் நாக சுப்பிரமணியன் அந்த பணியை முடிப்பதற்காக டெல்லி மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து இணை செயலாளர் வி.சி.சுக்லா பேசுவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஒருவருக்கு போன் செய்து கட்டுமான நிறுவனம் தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது, அதனை விரைந்து முடிக்குமாறு மிரட்டும் தொனியில் பேசி விட்டு இணைப்பை துண்டித்து உள்ளார்.
பின்னர் நாக சுப்பிரமணியனே நேரடியாக ஆணையர் அலுவலகத்திற்கு வந்து டெல்லியில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி அனுப்பியதாக தெரிவித்துள்ளார். பின்னர் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சந்தேகமடைந்து நாக சுப்பிரமணியன் செல்போன் எண்ணையும், டெல்லியில் இருந்து பேசிய ஐஏஎஸ் அதிகாரி எண்ணையும் சரிபார்த்தபோது நாக சுப்பிரமணியனே டெல்லியில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக பேசியது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஐஏஎஸ் அதிகாரி பேசுவது போல் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட நாக சுப்பிரமணியனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.