சட்டவிரோத போன் ஒட்டுக்கேட்பு... முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் ரேவந்த் ரெட்டி

தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் உடன் டி.பிரபாகர் ராவ்
தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் உடன் டி.பிரபாகர் ராவ்

தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் போன்களை சட்ட விரோதமாக ஒட்டுக்கேட்ட புகாரின் கீழ், அப்போதைய போலீஸ் உளவுத்துறை அதிகாரிகள் மீது புதிய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத்தொடங்கி உள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்தது முதலே தொடர்ந்து இருமுறை அங்கு கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ்(முன்னதாக டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடத்தியது. தெலங்கானா இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி, தனி மாநிலம் பெற்றதும், பிராந்திய மக்களுக்காக போராடியதும் பிஆர்எஸ் கட்சிக்கான செல்வாக்கினை அதிகரித்தது. இந்த வகையில் தொடர்ந்து 2 முறை அவர்கள் தெலங்கானாவில் ஆட்சியை பிடித்தனர்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

தொடர்ந்து 3வது முறையாகவும் பிஆர்எஸ் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்ற கணிப்புகள் அதிகரித்திருந்தன. இந்த நம்பிக்கையில் மாநில அரசு உயரதிகாரிகள் பலரும் பிஆர்எஸ் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் முழு விசுவாசமாக இருந்தனர். அதன் உச்சமாக எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை சட்டவிரோதமாக பதிவு செய்தனர். சிறப்பு உளவுத்துறை என்ற பெயரில் இயங்கிய பிரத்யேக அதிகாரிகள் இதனை சாதித்து வந்தனர்.

ஆனால் தேர்தல் முடிவு பிஆர்எஸ் கட்சிக்கு பாதகமாக வந்தது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வென்று, முதல்வராக ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றார். போன் ஒட்டுக்கேட்புகளில் அதிகம் பாதிக்கப்பட்ட ரேவந்த் ரெட்டி, பதவியேற்றதுமே அவை தொடர்பான போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றினார். அது போலீஸ் உயரதிகாரிகள் வெளிநாடுகளுக்கு ஓடி தலைமறைவாகும் அளவுக்கு வீரியமாக அமைந்தது.

போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் அப்போதைய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தலைமையேற்றிருந்த, மாநில உளவுத்துறை தலைவரான டி.பிரபாகர் ராவை பிரதான குற்றவாளியாக ஹைதராபாத் போலீஸார் இன்று(மார்ச் 25) அறிவித்தனர். தற்போது அமெரிக்காவில் இருப்பதாக சொல்லப்படும் பிரபாகர் ராவை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. அவர் மட்டுமன்றி அப்போது துணை காவல் ஆணையராக இருந்த பி.ராதாகிருஷ்ணா, தெலுங்கு தொலைக்காட்சி சேனல் ஒன்றின் மூத்த நிர்வாகி ஆகியோருக்கு எதிராகவும் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பிரனீத் ராவ்
பிரனீத் ராவ்

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை கம்ப்யூட்டர்களில் இடம்பெற்றிருந்த அதிகாரபூர்வ தரவுகள் தகவல்கள் பலவற்றை அழித்ததாக திருப்பத்தண்ணா, புஜங்கா ராவ் என 2 கூடுதல் எஸ்பி-க்களை ஹைதராபாத் போலீஸார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களுடன் டி.பிரனீத் ராவ் என்ற டிஎஸ்பி-யையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்தான் இணையவெளியில் பல்வேறு போலி அடையாளங்களை உருவாக்கி அதன் மூலமாக எதிர்க்கட்சித் தலைவர்களை கண்காணிப்பதில் முக்கியப் பங்கு வகித்தார்.

உளவுத்துறை அதிகாரிகளுக்கு எதிரான முதல்வரின் இந்த அதிரடி, பிஆர்எஸ் ஆட்சிக்காலத்தில் விசுவாசமாக இருந்த இதரப் பல உயரதிகாரிகளுக்கும் உதறலை ஏற்படுத்தியுள்ளது. ரேவந்த் ரெட்டி நிதானமாக காய் நகர்த்தி முன்னாள் அதிகாரிகள் பலரையும் திடமாக கைது செய்து வருவதால், அதற்கு எதிராக குரல் கொடுக்காது பிஆர்எஸ் கட்சி அடக்கி வாசிக்கிறது. கேசிஆர் மகளும் எம்எல்சி-யுமா கவிதாவை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அடுத்தபடியாக மகன் கே.டி.ராமராவ் மற்றும் பிஆர்எஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு எதிராக ரேவந்த் ரெட்டியின் நடவடிக்கை பாயும் என்ற கணிப்புகள் அதிகரித்துள்ளதால் தெலங்கானா அரசியல் களம் அனல் கண்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in