ஆன்லைன் சூதாட்டத்தில் 3 லட்சம் ரூபாயை இழந்த இளம் பொறியாளர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாராபுரத்தில் நடந்திருக்கிறது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் கவின்குமார். பொறியியல் படிப்பை முடித்துவிட்டு மூலனூரில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான கவின்குமார், தொடர்ந்து விளையாடி வந்து இருக்கிறார். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடுவதற்காக நண்பர் ஒருவரிடம் 3 லட்ச ரூபாய் கடன் வாங்கி விளையாடி இருக்கிறார். அப்போது, 3 லட்சம் பணத்தையும் கவின்குமார் இழந்திருக்கிறார்.
பணத்தை இழந்த கவின்குமார் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து இருக்கிறார். இந்த நிலையில் வீட்டில் உள்ள குளியலறையில் கவின்குமார் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த கவின்குமாரின் தம்பி உடனடியாக அருகில் இருந்தவர்களை அழைத்து வந்து அண்ணனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம் தமிழகத்தில் இருந்து இருக்கும் நிலையில் மேலும் ஒரு பொறியாளர் பணத்தை இழந்து தற்கொலை செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.