ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திடீர் பரபரப்பு... இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் ஈ.டி ரெய்டு!

இயக்குநர் அமீர்
இயக்குநர் அமீர்

போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் மற்றும் திரைப்பட இயக்குநர் அமீர் ஆகியோரது வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை  வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். போதைப் பொருள் பிடிபட்ட போது மூன்று பேரை கைது செய்த மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களிடம் நடத்த விசாரணையின் அடிப்படையில்தான் இந்த கடத்தலுக்கு சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக்தான் தலைவன் என்பதைக் கண்டறிந்து கைது செய்தனர். 

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்

அவரிடம் நடைபெற்ற விசாரணை அடிப்படையில் அவருடைய கூட்டாளி சதா என்பவரையும் கைது செய்தனர். இவர்கள் ஐந்து பேரும் சிறையில் இருக்கும் நிலையில் ஜாபர் சாதிக்கின் வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் அமீருக்கு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் சம்மன்  அனுப்பி அவரிடம் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர்களின் நடவடிக்கை ஒரு பக்கம் இருக்க தற்போது அமலாக்கத் துறையினரும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளனர். இன்று அதிகாலை சென்னையில் மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் திரைப்பட இயக்குநர் அமீர் வீடு அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும், ஜாபர் சாதிக்கின் நண்பர் புகாரி என்பவர் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in