விசாரணைக்கு அழைத்த அமலாக்கத்துறை... உயிரை மாய்த்த பாமக வழக்கறிஞர்

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் நடந்த விபரீதம்
விசாரணைக்கு அழைத்த அமலாக்கத்துறை... உயிரை மாய்த்த பாமக வழக்கறிஞர்

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த திருவேற்காடு, சுந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் (31). பாமகவில் திருவேற்காடு பகுதி அமைப்பு செயலாளராக இருந்து வந்த கோபிநாத் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, டி.டி.வி.தினகரன் தரப்பு லஞ்சம் கொடுத்ததாக டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் லஞ்சம் கொடுத்த வழக்கில் டி.டி.வி.தினகரன் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ்சந்திரகர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லியை சேர்ந்த தொழிலதிபரிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக டெல்லி அமலாக்கத்துறையினர் சுகேஷை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சுகேஷ் பல மோசடியில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து சுகேஷ் சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் கோபிநாத், ராமாபுரத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் அமலாக்கத்துறை குற்றவாளியாக சேர்த்து நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து 2017-ல் மூத்த வழக்கறிஞர் மோகன்ராஜ் மற்றும் கோபிநாத் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இந்த நிலையில், ஏப்ரல் 8-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு டி.டி.வி.தினகரனுக்கு டெல்லி அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பினர். இதேபோல் வழக்கறிஞர் கோபிநாத்தையும் வரும் 8-ம் தேதி விசாரணை ஆஜராகுமாறு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு கோபிநாத் தூங்க செல்வதாக கூறிவிட்டு வீட்டின் எதிரே உள்ள குடிசைக்கு சென்றுள்ளார். இன்று காலை கோபிநாத்தின் தங்கை குடிசைக்கு சென்று பார்த்த போது கோபிநாத் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கோபிநாத் தங்கை அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற திருவேற்காடு காவல்துறையினர், கோபிநாத் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்ததால் மனவேதனை அடைந்த கோபிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினரின் விசாரணைக்கு பின்னரே கோபிநாத் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தெரியவரும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in