மின்சார பழுதை சரி செய்தபோது விபரீதம்; மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

ஏழுமலை
ஏழுமலை

மின்மாற்றில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கி காயமடைந்த மின்வாரிய ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு ஊழியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை(58). இவர் மாதவரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். அதேபோல் திருவள்ளூவரைச் சேர்ந்த பிரபு (41) இதே மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி மாதவரம் சிஎம்டிஏ டிராக் டெர்மினல் பகுதியில் உள்ள மின்மாற்றியில் திடீரென பழுது ஏற்பட்டது. அதனை சரி செய்ய வேண்டி ஏழுமலை, பிரபு ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அங்கு ஏழுமலை 20 அடி உயரத்தில் உள்ள மின்மாற்றியில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கி கீழே வேலை செய்து கொண்டிருந்த பிரபு மீது விழுந்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் பிரபு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் மாதவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in