
அண்ணனூர் பணிமலையிலிருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்த புறநகர் மின்சார ரயில் தரம் புரண்டு விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், அண்ணனூரில் ரயில்வே பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் ரயில்கள் சரி செய்யப்பட்டு பின்னர் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் இன்று காலை கொண்டுவரப்பட்டது. அப்போது தண்டவாளத்தை ரயில் கடக்க முயன்ற போது 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் வேலூர், அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட மார்க்கத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. வந்தே பாரத் ரயிலின் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். தகவல் அறிந்து ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரயில் நிற்காமல் சிக்னலை கடந்து சென்றதால் பெட்டிகள் தரம் புரண்டது தெரியவந்தது. மேலும் பனிமூட்டம் காரணமாக விபத்து நடந்ததா அல்லது ஓட்டுநரின் கவன குறைவாக விபத்து நடந்ததா? என்று ரயில்வே துறையின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.