
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் காதலனுடன் சேர்ந்து தங்கைகளை அடித்துக் கொன்ற காதலியை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கான்பூர் அடுத்துள்ள பகதூர்பூர் கிராமத்தில் கடந்த அக்டோபர் 8ம் தேதி ஷில்பி (7), ரோஷினி (5), ஆகிய 2 சிறுமிகள் அடித்துக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் போது சிறுமிகளின் அக்காவான அஞ்சலி (19) என்பவரை போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
ஒரு கட்டத்தில் சிறுமிகள் இருவரையும் அடித்துக் கொன்றதை அஞ்சலி ஒப்புக்கொண்டார். தனது காதலன் அமான் என்பவரை வீட்டிற்கு வரவழைத்து, தனிமையில் இருந்த போது, சிறுமிகள் இருவரும் பார்த்து விட்டதாகவும், பெற்றோரிடம் புகார் அளிப்பதாக இருவரும் கூறியதால், ஆத்திரத்தில் அவர்களை காதலனும் காதலியும் சேர்ந்து அடித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அமானை கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காதலனுடன் சேர்ந்து 2 தங்கைகளை சொந்த அக்காவே அடித்துக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.