18 வயது சிறுவன் ஒருவன், சிறுவர்கள் கொண்ட கும்பலால் நடுரோட்டில் அடித்து கொலைச் செய்யப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை டெல்லியின் சங்கம் விஹார் பகுதியில் உள்ள தெருவில் 18 வயது சிறுவன் ஒருவன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது, அந்த சிறுவனை எட்டுக்கும் மேற்பட்ட சிறுவர்களை கொண்ட கும்பல் ஒன்று சுற்றி வளைத்தது. அவர்கள் வந்த வேகத்தில் சிறுவனை சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.
சிறுவனின் உடல் முழுவதும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியது. வலி தாங்க முடியாத சிறுவன் அங்கும் இங்குமாக ஓடி தப்பிக்க முயன்றான். அப்போதும் கூட விடாமல் விரட்டி விரட்டி தாக்கினர்.
ரோட்டில் சிறுவனை தரதரவென இழுத்துக் கொண்டே சென்ற கும்பல், சரமாரியாக தாக்கிக் கொண்டே சென்றது. அந்த கும்பலிடம் இருந்து சிறுவனைக் காப்பாற்றும் முயற்சியில் அப்போது சாலையில் சென்ற யாரும் இறங்கவில்லை. சிறுவன் மயங்கி விழுந்த பிறகு தான் அந்த கும்பல் அவனை விட்டுவிட்டு அங்கிருந்து நடந்து சென்றது.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார், படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கும்பலுக்கும் சிறுவனுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததால் சிறுவனை வழி மறித்து தாக்கியுள்ளனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.