ராணுவ வீரர்களைக் குறிவைக்கும் யுனிவர் காயின்: பொருளாதார குற்றப்பிரிவு அதிரடி!

ராணுவ வீரர்களைக் குறிவைக்கும் யுனிவர் காயின்: பொருளாதார குற்றப்பிரிவு அதிரடி!

ராணுவ வீரர்களைக் குறிவைத்து 1,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து யுனிவர் காயின் நிறுவன முகவர்களின் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அருண்குமார் என்பவர் யுனிவர் காயின் என்கிற டிஜிட்டல் காயின் நிறுவனத்தைக் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் 7,70,000 ரூபாய் டெபாசிட் செய்தால் வாரம் ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும் எனப் பொதுமக்களின் ஆசையைத் தூண்டும் விதமாகக் கவர்ச்சிகரமான விளம்பரங்களை அப்பகுதியில் செய்து வந்துள்ளார்.

அந்த விளம்பரங்களை உண்மை என நம்பிய முன்னாள் ராணுவ வீரர்களான நந்தகுமார், சங்கர், ஞானசேகர், சீனிவாசன், பிரகாஷ், வேலன் ஆகியோர் இந்த நிறுவனத்தில் முகவர்களாகச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

அதிக அளவில் இந்த திட்டத்தில் ஆட்களைச் சேர்த்தால் அதற்கேற்ப கமிஷன் கிடைக்கும் என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.  டார்கெட்டை முடித்த முகவர்களை அந்நிறுவனத்தினர், கோவா, தாய்லாந்து எனச் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று குளிர்வித்திருக்கிறார்கள். இன்னோவா கார், வீடு உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ வீரர்களை மட்டும் குறிவைத்து 1000 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாகச் சமீபத்தில் அந்த நிறுவனம் மீது புகார் எழுந்தது.

இந்நிலையில் ‘யுனிவர் காயின்’ நிறுவனத்திற்கு சொந்தமாக  ஓசூர், பர்கூர் உள்ளிட்ட 6 இடங்களில் உள்ள இடைத்தரகர்களின் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இன்று காலை முதல் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in