கத்தை கத்தையாக சிக்கிய போலி வாக்காளர் அடையாள அட்டைகள்: அச்சகத்திற்கு சீல்!

கத்தை கத்தையாக சிக்கிய போலி வாக்காளர் அடையாள அட்டைகள்: அச்சகத்திற்கு சீல்!

நூற்றுக்கணக்கான போலி வாக்காளர் அட்டை தயாரித்த அச்சக உரிமையாளர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரின் அச்சகத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள நடுவந்தன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். அவர் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவுடன் அவரின் வாக்காளர் அடையாள அட்டையும் இணைக்கப்பட்டிருந்தது. அந்த வாக்காளர் அடையாள அட்டை வித்தியாசமாக இருந்ததால், அதன் உண்மைத் தன்மை குறித்து பரிசோதனை செய்தனர். இதையடுத்து அந்த அட்டை போலியானது எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை அழைத்த அதிகாரிகள் சார்- ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.

வருவாய்த்துறையினரின் விசாரணையில், அந்த வாக்காளர் அடையாள அட்டை திண்டிவனம் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான ராகவேந்திரா பிரிண்டர்ஸ் என்னும் அச்சகத்தில் போலியாகத் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து சார்- ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அடையாள அட்டைகள் போலியாகத் தயாரிப்பது தெரியவந்தது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலி வாக்காளர் அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டன. அச்சக இயந்திரம், கணினி உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அச்சகத்தின் உரிமையாளர் சுரேஷ் என்பவரைக் கைது செய்து ரகசிய இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து அந்த அச்சகத்திற்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in