குடிபோதையில் நெடுஞ்சாலையில் தாறுமாறாக பயணம்
குடிபோதையில் நெடுஞ்சாலையில் தாறுமாறாக பயணம்

நெடுஞ்சாலையில் பைக்கில் 8 போட்ட போதை வாலிபர்... வைரல் வீடியோவால் சிக்கினார்

சூலூர் அருகே சாலையில் வாகனங்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனத்தில், ஆபத்தான முறையில் பயணித்த ஆசாமி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவரை போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகள் உதவியுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம், சூலூர்- திருச்சி சாலையில் கடந்த வாரம் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துக்கு முன்பாக போதை ஆசாமி ஒருவர், குறுக்கும் நெடுக்குமாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஒட்டி சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார். இதனை பேருந்து பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். இந்த வீடியோ ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவியது.

வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

மேலும் மதுபோதையில் சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிய போதை ஆசாமியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலைதள பயனாளர்கள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் போதையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனம் ஓட்டிய நபர் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்த சூலூர் போலீஸார், திருச்சி சாலையில் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

சிசிடிவி உதவியுடன் வினோத் மணிகண்டன் கைது
சிசிடிவி உதவியுடன் வினோத் மணிகண்டன் கைது

அதில் போக்குவரத்துக்கு இடையூறாக அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிய நபர் ஒண்டிபுதூர் பகுதியில் வசிக்கும் வினோத் மணிகண்டன் என்பதும், இருகூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீஸார், அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in