போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?

பிடிபட்ட போதைப்பொருள் மற்றும் கடத்தல்காரர்கள் - ஜாபர் சாதிக்
பிடிபட்ட போதைப்பொருள் மற்றும் கடத்தல்காரர்கள் - ஜாபர் சாதிக்

கடந்த சில தினங்களாக தமிழகம் அதிர்ந்து போயிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் ஊடுருவிய போதைப்பொருட்கள் கடத்தலின் பின்னணியில் தமிழகத்தை சேர்ந்த ஒரு நபர் தேடப்படுவதும், அவரது சினிமா முதல் அரசியல் வரையிலான பின்னணியும் இந்த அதிர்ச்சியை மேலும் கூட்டியுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், போதைப்பொருட்கள் விவகாரத்தில் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன.

போதைப்பொருள் தயாரிப்பு, கடத்தல், விநியோகம் ஆகியவை நிழலுலகின் தலைமறைவு மாபியா கும்பல்களால் நடத்தப்படுவதாக வெகுஜனம் சினிமாத்தனமாக நம்பியிருந்தது. ஆனால், தென்தமிழகத்தின் ஒரு மூலையில் பிறந்து, அரசியலில் தொடர்புகளை வளர்த்துக்கொண்டு, போதை சாம்ராஜ்ஜியத்தில் சம்பாதித்த கருப்பு கரன்சியை சினிமாவில் வெள்ளையாக்கி செழித்த ஜாபர் சாதிக் என்ற நபர் தற்போது போதைக்கடத்தல் புகார்களால் தேசிய அளவில் டிரெண்டிங்கில் இருக்கிறார். சர்வதேச அளவில் போலீஸாரால் தேடப்பட்டு வருகிறார்.

ஹவாலா பரிமாற்றங்களின் வலைப்பின்னலில் இணைந்து, அதன் வழியே கடத்தல் தொழில்களின் சூத்திரங்கள் அறிந்த ஜாபர் சாதிக், வீரியமிக்க சிந்தெடிக் போதைப்பொருள் ரகங்களை கடந்த பல ஆண்டுகளாகவே கடத்துவதில் ஈடுபட்டிருக்கிறார். அரசியல் பின்புலத்துக்காக திமுகவின் அயலக அணி மாவட்ட பொறுப்பாளராக இருந்திருக்கிறார். கட்சி நிகழ்வுகளுக்கு எக்கச்சக்கமாக அள்ளிவிட்டிருக்கிறார். நிவாரண நிதி வழங்கலின் பெயரில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.

சினிமாவிலும் கால் வைத்து பல்வேறு சினிமா உலகப் புள்ளியினரோடு இணைந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார் ஜாபர் சாதிக். இப்படி அரசியல், சினிமா என நன்கறியப்பட்ட நபரின் மறுபக்கம், சர்வதேச போதைக் கடத்தலாக இருந்தது தற்போது தாமதமாக வெளிப்பட்டிருக்கிறது.

ஹாசிஸ் முதல் ஹெராயின் வரையிலான போதைபொருட்களுக்கு அப்பால், ஆய்வகத்தில் உருவாக்கப்படும் சிந்தெடிக் ரக வீரிய போதை ரகங்களை கடத்தியதில் தனித்து நின்றிருக்கிறார் ஜாபர். குறிப்பாக, உலகளவில் அதிக விலைகொண்ட போதைப்பொருளாகவும், வீரியமான ஆரோக்கிய பாதிப்புகளையும் ஏற்படுத்தும் மெத்தம்பெட்டமைன் என்ற சிந்தெடிக் ரக போதைப்பொருளை தயாரிப்பதற்கான, ’சூடோபெட்ரைன்’ என்ற மூலப்பொருளை சிரத்தையுடன் ஜாபர் கடத்தி இருக்கிறார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பல்வேறு நாடுகளில் போதைப்பொருள் ஊடுருவல் அதிகரித்ததை அடுத்து, அதன் பின்னணியை துழாவிய அந்த நாட்டு போதை தடுப்பு போலீஸர், கடைசியில் டெல்லி போலீஸாருக்கு தகவல் தந்தனர். டெல்லி போலீஸாருடன், போதைப்பொருள் கடத்தலை ஆராயும் மத்திய விசாரணை அமைப்பான என்சிபி அதிகாரிகள், ஜாபர் சாதிக் நெட்வொர்க்கை வளைக்க தமிழகம் வரை பாய்ந்திருக்கிறார்கள். ஜாபர் சாதிக் தலைமறைவானதும், அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு அதிகரித்ததும் தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பல புள்ளிகளை உலுக்கி இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதியுடன் ஜாபர் சாதிக்
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதியுடன் ஜாபர் சாதிக்

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோருடனான ஜாபர் சாதிக்கின் புகைப்படங்கள் இந்திய அளவில் பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் நிவாரண நிதி உள்ளிட்ட பொதுநலம் வழங்கலுக்கானவை என்ற போதும், ஜாபர் சாதிக்கின் கட்சி பொறுப்பு காரணமாக திமுக வெகுவாக சேதம் கண்டிருக்கிறது. அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ஜாபர் சாதிக்கை திமுக நீக்கிய பிறகும், அதன் கறைகளை கழுவ திமுக தடுமாறி வருகிறது.

சற்றும் ஐயம் ஏற்படாத வகையில், தமிழகத்தில் அமர்ந்துகொண்டு சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க்கை இயக்கிய ஜாபர் சாதிக்கை முன்வைத்து, திமுக மற்றும் முதல் குடும்பத்துக்கு எதிராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் அண்ணாமலை ஆகியோரை சீற வைத்திருக்கிறது.

ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் அனுபவத்தில் தோய்த்து, தமிழக மக்கள் மீதான அக்கறை தெறிக்க அண்ணாமலை வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ஊடுருவி, இளம்தலைமுறையினரை சீரழிக்கத் துடிக்கும் போதைப்பொருள் கலாச்சாரம் பல தரப்பிலும் கவலையை தந்திருக்கிறது.

மாநில அரசின் நிதித்தேவைக்கு கற்பகத்தருவான டாஸ்மாக் போதை பானங்களை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி தமிழகத்தில் நீண்ட காலமாக போராடுவோர் வாயடைத்துப் போயிருக்கிறார்கள். மெத்தம்பெட்டமைன் தயாரிப்புக்கான சூடோபெட்ரைன் மூலப்பொருள், கிலோவுக்கு ஒரு கோடி வரை சர்வதேச போதை சந்தையில் விலை போகிறது. இதனை பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் போர்வையில் கன்டெய்னர்களில் கடத்தி வந்திருக்கிறார் ஜாபர் சாதிக்.

இந்த போதைக்கடத்தலில் ஜாபர் சாதிக் தனியாக ஈடுபட வாய்ப்பில்லை என்பதால், அவருக்கு உதவிய பலதுறையின் கண்ணிகள் மற்றும் பின்புலத்தை என்சிபி மற்றும் உள்துறை அமைச்சகத்தின் நேரடி பார்வையில் இருக்கும் டெல்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணை வளையம் அரசியல் புள்ளிக்குச் சொந்தமான பிரபல கூரியர் கம்பெனி வரைக்கும் பாய்கிறது.

போதை நெட்வொர்க் என்றாலே அதனுடன் பணமோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுடனான தொடர்பு ஆகியவையும் வெளிச்சத்துக்கு வரும் என்பதால், அரசியல் மற்றும் சினிமா புள்ளிகள் பலரும் அரண்டு போயிருக்கிறார்கள். இந்த இரு குற்றப்பின்னணிக்காக என்ஐஏ, அமலாக்கத்துறை ஆகிய மத்திய விசாரணை அமைப்புகளும் விசாரணையில் இறங்க இருக்கின்றன.

தமிழ்நாட்டின் போதை பிரச்சினை டாஸ்மாக் மட்டுமே என்று அதற்கு எதிராக போராடி வந்தவர்கள் அரண்டு போயிருக்கிறார்கள். கல்லூரி மாணவிகள் போதையில் தள்ளாடியது, பேருந்து நிலையத்தில் போதையில் குழுவாக சண்டையிட்டுக் கொண்டது, கொலை, கொள்ளை மற்றும் வன்முறை, வழக்குகளில் சிக்குபவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்களாக இருப்பது, அனுதினம் தமிழகமெங்கும் மூட்டை மூட்டையாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது ஆகிய செய்திகள் வெளியானபோது தமிழகம் அதிர்ந்ததை விட தற்போது வாயடைத்துப் போயிருக்கிறது.

இத்தனை அமளிகளுக்கு மத்தியிலும் மார்ச் 1-ம் தேதி பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், மதுரையில் வந்திறங்கிய பிரகாஷ் என்ற நபரிடம் 30 கிலோவும், சென்னையில் அவரது மனைவி வசம் 6 கிலோவுமாக ரூ180 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

2 தினங்களுக்கு முன்னர் குஜராத் அருகே கடலில் கைப்பற்றப்பட்ட 3,110 கிலோ ஹாசிஸ், 158 கிலோ மெத்தம்பெட்டமைன், 24 கிலோ ஹெராயின் ஆகியவை தமிழ்நாட்டு விநியோகத்துக்காக காத்திருந்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார். 2 வருடங்களுக்கு முன்னர் குஜராத்தின் அதானி கட்டுப்பாட்டில் இருக்கும் முந்த்ரா துறைமுகத்தில் சுமார் 3,000 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டபோதும், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் போதைப்பொருள் வழக்கில் கைதானபோதும், தேசத்தில் போதைப்பொருள் கடத்தல் குறித்தான கவலைகள் அதிகரித்தன. இவை உட்பட கடந்த சில ஆண்டுகளாகவே நாடு நெடுக நிலம், நீர், ஆகாயம் என சகல எல்லைகளிலும் போதைக்கடத்தல் இந்தியாவில் அதிகரித்து வந்தது.

ஆனால், அதன் பிரதான பின்புலங்களில் ஒன்று தமிழகத்தில் இருந்தது எவரும் எதிர்பாராதது. அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பால் தமிழகத்தில் ஊடுருவியிருக்கும் போதைப்பொருள் கடத்தலின் கண்ணிகள் வேரறுக்கப்பட வேண்டும். மீண்டும் அவை தலையெடுக்காதவாறு சட்டத்தின் தடுப்பு வேலிகளும், சமூகத்தில் விழிப்புணர்வும் அதிகரிக்க வேண்டியதும் காலத்தின் தேவையாக இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

இப்படியெல்லாம் வாக்கு சேகரிக்கக்கூடாது... அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

பெங்களூரு ஓட்டலில் டைமர் வெடிகுண்டு வெடிப்பில் தீவிரவாத சதியா?... என்ஐஏ தீவிர விசாரணை!

கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு அநீதி இழைக்காதீர்கள்... சு.வெங்கடேசன் எம்.பி கொந்தளிப்பு!

4+1 வேண்டும்... பிரேமலதா பிடிவாதம்: அதிமுக- தேமுதிக கூட்டணி நிலவரம்!

சரசரவென குறைந்த பூண்டு விலை...இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in