
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் மின்சார ரயில் விபத்திற்கு வீடியோ காலில் பேசியப்படி ஓட்டுநர் ரயிலை இயக்கியதே காரணம் என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், சாகுர் பாஸ்தி ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட மின்சார ரயில் ஒன்று, இரவு 10.49 மணிக்கு மதுரா ரயில் நிலையம் சென்றது. அப்போது திடீரென்று எஞ்சின் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரயில் தடம் புரண்டது. தடம் புரண்ட வேகத்தில் ரயில் எஞ்சின் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி பிளாட்பாரம் மீது ஏறி நின்றது.
இதனால் பிளாட்பாரத்தில் காத்திருந்த பயணிகள் அலறி அடித்து ஓடித்தப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் வேகமாக ரயிலில் இருந்து இறங்கினர். மேலும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து சிசிடிவியை ஆய்வு செய்த அதிகாரிகள், ரயிலை இயக்கிய ஓட்டுநர் வீடியோ காலில் பேசியப்படி இயக்கியதைக் கண்டுப்பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.