2011ல் இரட்டைக் கொலை... 12 ஆண்டுகளாக தலைமறைவு... சென்னையில் முக்கிய குற்றவாளி கைது

கொலை செய்யப்பட்ட தம்பதி
கொலை செய்யப்பட்ட தம்பதி

வனஊழியர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்து 40 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் துப்பாக்கி வாங்கி கொடுத்த முக்கிய குற்றவாளி போலி ஆவணங்கள் மூலம் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பகுதியைச் சேர்ந்த வன ஊழியர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யோகேஸ்வரி ஆகியோர் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி கோட்டாரில் நடந்த திருமண விழாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் சுசீந்திரம் காவல் நிலையம் அருகே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். தம்பதியினரை கொலை செய்து 40 சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தையே உலுக்கிய இந்த இரட்டைக்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க சுசீந்திரம் போலீஸார் தனிப்படை அமைத்து சுமார் 8 மாதங்களுக்கு பிறகு முதல் குற்றவாளியான அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக இருந்த புத்தேரியைச் சேர்ந்த சகாயம் என்ற ஐயப்பன் என்பவரை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட தம்பதி
கொலை செய்யப்பட்ட தம்பதி

அதனை தொடர்ந்து முண்டக்கண் மோகன், தாதா செந்தில், சுயம்புலிங்கம், மணிகண்டன், சந்தை ராஜன், சுரேஷ், சிவாஜி ராஜன், வெள்ளை செந்தில், ஜீவா, ஜஸ்டின் மார்ஷல் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 8வது குற்றவாளியான சதாசிவம், செல்வம் (11வது குற்றவாளி), ஜெபராஜ் (14 வது குற்றவாளி) ஆகிய மூன்று பேர் தலைமறைவாகினர். மேலும் இவ்வழக்கின் தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க முடியாமலும், கொலைக்கான உண்மையான காரணம் தெரியாததால் வழக்கில் தொய்வு ஏற்பட்டது. இதனால் சுசீந்திரம் போலீஸாரால் குற்றபத்திரிகை தாக்க செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து வன அலுவலர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யோகேஸ்வரி சுட்டுக்கொலை செய்யப்பட்ட செய்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டி அவரது உறவினர்கள் சிபிசிஐடி விசாரணை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பின்பு சிபிசிஐடி விசாரணையிலும் தொய்வு ஏற்பட்டதால் தற்போது வரை இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 12 ஆண்டுகளாக இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளி சதாசிவம், செல்வம், ஜெபராஜ் ஆகிய 3 பேரை கன்னியாகுமரி சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

12 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் முக்கிய குற்றவாளி கைது
12 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் முக்கிய குற்றவாளி கைது

இந்நிலையில் இந்த இரட்டைக்கொலை வழக்கில் துப்பாக்கி சப்ளை செய்த முக்கிய குற்றவாளியான சதாசிவம் சென்னை விருகம்பாக்கம் ஸ்ரீ ராமர் தெருவில் பதுங்கி இருப்பதாக சிபிசிஐடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.‌ அதன்பேரில் நள்ளிரவு சிபிசிஐடி போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று அங்கு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சதாசிவத்தை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 12 ஆண்டுகளாக சதாசிவம் தனது பெயர் மாற்றம் அடையாளங்களை மறைத்து குடும்பத்தோடு வாடகை வீட்டில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சதாசிவத்தை இரவோடு இரவாக சிபிசிஐடி போலீஸார் கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்றனர். தமிழகத்தையே உலுக்கிய இரட்டைக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை 12 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்துள்ள நிலையில் தற்போது தலைமறைவாக உள்ள மேலும் இருவரை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in