நம்பிக்கையுடன் நகரும் சிறப்பு புலனாய்வுக் குழு!

முடிவுக்கு வருமா ராமஜெயம் கொலை வழக்கு?
நம்பிக்கையுடன் நகரும் சிறப்பு புலனாய்வுக் குழு!

தமிழக போலீஸாருக்கு மட்டுமல்ல... சிபிஐக்கே சவால்விட்ட வழக்கு அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை வழக்கு. திமுக ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் இருக்கிறது இந்த வழக்கு. இப்போதாவது கொலைக்கான காரணம் தெரியவருமா... கொலையாளிகளை அடையாளம் காண முடியுமா என காத்திருக்கிறது அமைச்சர் நேருவின் குடும்பம்.

கடந்த 2012 மார்ச் 29-ம் தேதி மர்ம நபர்களால் ராமஜெயம் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவருக்கு சயனைடு கொடுக்கப்பட்டிருந்தது, கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது, பின்மண்டையில் தாக்கப்பட்டிருந்தது என்பது உள்ளிட்ட தடயங்கள் சுட்டிக்காட்டப் பட்டிருந்தது. முதலில் இந்த வழக்கை திருச்சி மாநகரப் போலீஸ் விசாரித்தது. அதில் துப்புத் துலங்காததால் வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதிலும் மர்மங்கள் விலகாத நிலையில், ராமஜெயத்தின் மனைவி லதாவின் வேண்டுகோளை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அவர்கள் விசாரித்தும் இந்த வழக்கில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. ஒன்பது ஆண்டுகள் கடந்தது தான் மிச்சம். இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் வழக்கை மறு விசாரணை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டது நேருவின் குடும்பம்.

இதையடுத்து, நேருவின் மற்றொரு சகோதரர் ராமச்சந்திரன், 'இந்த வழக்கை, தமிழக காவல்துறை மீண்டும் விசாரிக்க வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதை ஏற்று, ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தமிழக போலீஸாரைக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும், வழக்கு தொடர்பாக, 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யவும் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது நீதிமன்றம்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அரியலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதன், சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளர் ரவி ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. ஒரு எஸ்பி, 3 டிஎஸ்பி-க்கள் மற்றும் 5 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 45 பேர் கொண்ட இந்த குழுவானது, ஏற்கெனவே திரட்டப்பட்ட விசாரணை ஆவணங்களை அடிப்படையாக வைத்து மேல் விசாரணையை துவக்கியது. ஆனால், சிபிஐ தரப்பில் மாநில போலீஸாரிடன் இணைந்து இவ்வழக்கை விசாரிக்க விரும்பவில்லை. அதனால் தங்களிடமிருந்த ஆவணங்கள், தகவல்களை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது சிபிஐ. தேவைப்பட்டால் வழக்கில் உதவிகளைச் செய்வதாக சிபிஐ உத்தரவாதம் அளித்துள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தங்களுடன் மேலும் சில திறமையான போலீஸாரையும் இணைத்துக் கொண்டுள்ளனர். இந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் எஸ்பி முதல் கான்ஸ்டபிள் வரை அத்தனை பேரும் மிக மிகத் திறமையானவர்கள். டிஎஸ்பி-யான மதன் க்ரைம் கிங் மதன் என்று பெயரெடுத்தவர். இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தங்கி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். கூலிப்படைகள், அவர்களின் நெட்வொர்க்குகள் குறித்தும், ராமஜெயத்திற்கு எதிரானவர்கள், அவரது தொழில் தொடர்புகள் குறித்தும் விசாரணைகள் நடந்து வருகிறது.

முக்கியமாக எஸ்பி-யான ஜெயக்குமார் தவறாமல் திருச்சி மன்னார்புரம் அருகேயுள்ள அலுவலகத்துக்கு வந்து விடுகிறார். விசாரணை வேலைகளை ஒருங்கிணைக்கிறார். நேருவின் குடும்பத்தினரை அவ்வப்போது அலுவலகம் வரவழைத்து அவர்களின் சந்தேகங்கள் மற்றும் யூகங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார். நேருவிடம் அவரது வீட்டிற்கே சென்று மூன்று முறை விசாரித்திருக்கிறார். நேருவின் உறவினர்கள், ராமஜெயம் குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், நண்பர்கள் என்று சுமார் 300 பேர் வரை இதுவரை விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிபிஐ தரப்பு விசாரணை ஆவணங்கள் அனைத்தும் படித்துப் பார்க்கப்பட்டு அதன் விசாரணை எதைநோக்கியதாக இருந்தது, அதில் இன்னும் எந்தந்த கோணங்களில் விசாரணை செய்யப்படாமல் இருக்கிறது என்பதையெல்லாம் தனித்தனியாக பிரித்து அதன் அடிப்படையிலும் சிறு தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.

அரசியல் பின்னணி, தொழில் போட்டி, பெண் விவகாரம் என பல கோணங்களில் விசாரணை விரிவடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தக் கொலையில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கும்பலின் சதியை சிபிஐ கண்டுபிடித்திருந்தது. அந்த சதிக்கு திருச்சியைச் சேர்ந்த சாமி ரவி மூளையாக இருந்ததாகவும் சந்தேகப்பட்டு விசாரித்திருந்தது. இதனடிப்படையில் சாமி ரவி மீது சிறப்புப் புலனாய்வுக்குழு தனது அழுத்தமான பார்வையைப் பதித்திருக்கிறது. சாமி ரவியின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தனக்கும் ராமஜெயம் கொலைக்கும் எந்தத் தொடர்புமில்லை என இதுவரை நடந்துள்ள விசாரணைகளில் சாமி ரவி சொல்லி இருந்தாலும் அவர் மீது சிறப்புப் புலனாய்வுக்குழுவுக்கு இன்னமும் சந்தேகம் இருக்கிறது. இன்னொரு பிரபல ரவுடியான சி.டி.ரவியும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் சந்தேக வளையத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதனிடையே ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை குறித்து அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளது என அவர் அப்போது தெரிவித்திருந்தார். விரைவில் குற்றவாளிகளை நெருங்கிவிடுவோம் எனவும், கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரகசிய அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ஆனால் என்னதான் துரிதப்படுத்தினாலும் இத்தனை வருடங்கள் கழித்து இந்த வழக்கு விசாரணையில் இனி பெரிதாக ஒன்றும் பயனிருக்காது என்று சொல்லும் மூத்த வழக்கறிஞர்கள் சிலர், “பத்தாண்டு காலம் கடந்தபிறகு ’மெட்டீரியல் எவிடென்ஸ்’ எனப்படும் குற்றத்தோடு சம்பந்தப்பட்ட பொருட்கள் எதையும் இனி புதிதாக கண்டுபிடிக்க முடியாது. முன்பே கைப்பற்றியிருந்தாலும் அதை பராமரித்து வைத்திருப்பதும் சிரமம். ஆனால், குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட அப்படி எதையும் தமிழக போலீஸாரோ சிபிஐயோ கண்டுபிடித்ததாகவும் தெரியவில்லை. அத்துடன் கண்ணால் பார்த்த சாட்சியங்களும் இவ்வழக்கில் யாருமில்லை. அதனால் இந்த வழக்கு முடிந்துபோன ஒன்றுதான். யாரையும் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிருபிக்க வாய்ப்புக்கள் மிக மிக குறைவுதான்” என்கிறார்கள்.

எனினும் அமைச்சர் நேருவைப் பொறுத்தவரை நடப்பது நமது ஆட்சி என்பதால் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் நிச்சயம் கொலையாளிகளைக் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார். அதற்கேற்ப இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் தமிழக அரசும், போலீஸாரும் உறுதியாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

இத்தனை வருடங்கள் கழித்து இந்த வழக்கில் இனி துப்புக் கிடைப்பது கஷ்டம் தான் எனச் சொல்லப்பட்டாலும் நம்பிக்கையோடு விசாரணையைத் தொடர்கிறது சிறப்பு புலனாய்வுக் குழு. அப்படி ஒருவேளை, இந்த வழக்கில் துப்புத் துலங்கினால் இந்திய அளவில் பேசப்படும் வழக்காக ராமஜெயம் கொலை வழக்கு மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in