
தனியார் மருத்துவமனையில் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவரை மருத்துவர் தாக்கும் சம்பவம் நாமக்கல்லில் நடந்திருக்கிறது.
நாமக்கல் கோட்டைமெயின் ரோட்டில் கண்ணகி என்ற பெயரில் மருத்துவர் ராஜ்குமார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் நல்லம்மாள் என்ற பெண் தூய்மைப் பணியாளர் பணியாற்றி வருகிறார். இவரை மருத்துவமனை டாக்டர் ராஜ்குமார் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள டாக்டர் ராஜ்குமார், பெண் தூய்மைப் பணியாளர் நல்லம்மாள் கழிவறையை சுத்தம் செய்யாமல் இருந்ததாகவும் எச்ஐவி பாசிட்டிவ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததாலும் அவரது குடும்ப சூழ்நிலையை கருதி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதோடு பணியும் வழங்கி வருவதாகவும் கூறி இருக்கிறார். அவரை அடிக்க வேண்டும் என்ற எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் மருத்துவர் கூறியிருக்கிறார்.
இதனிடையே பெண் தூய்மைப் பணியாளர் நல்லம்மாள் கூறுகையில், சில தினங்களுக்கு முன்பு சரியாக பணி செய்யவில்லை என்று மருத்துவர் திட்டினார் என்றும் பின்னர் மாலையில் தன்னை பணிக்கு சேர்த்துக் கொண்டதாகவும், தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே மருத்துவர் இருப்பதாகவும் கூறினார்.