`லைக்'குக்கு ஆசைப்பட்டு இதுபோன்று வீடியோ போடாதீங்க'- சிக்கிய மாணவர்கள் வாக்குமூலம்

`லைக்'குக்கு ஆசைப்பட்டு இதுபோன்று வீடியோ போடாதீங்க'- சிக்கிய மாணவர்கள் வாக்குமூலம்

ரயில் நிலையத்தில் கத்தியுடன் வீடியோ வெளியிட்டு போலீஸில் சிக்கிய பள்ளி மாணவர்கள், தற்போது, "லைக்குக்காகவே நாங்கள் இதை செய்தோம். எங்களைப் போல் லைக்கிற்கு ஆசைப்பட்டு யாரும் இதுபோல செய்ய வேண்டாம்" என வீடியோ வெளியிட்டுள்ளனர்.

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில், வட சென்னை திரைப்பட BGM-க்கு பட்டா கத்தியுடன் 4 சிறுவர்கள் நடந்து வருவது போன்ற வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோ தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அந்த 4 பேரும் கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்தது.

அதனடிப்படையில் அந்த 4 மாணவர்களையும் கீழ்ப்பாக்கம் போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் லைக்குக்காக பட்டாக் கத்தியுடன் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாக வாக்குமூலம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் கையில் பட்டாக் கத்தி எவ்வாறு வந்தது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் போலீசாரிடம் சிக்கிய பள்ளி மாணவர்கள் 4 பேரும் லைக்குக்காக யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என அறிவுறுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தாங்கள் அனைவரும் லைக்குக்கு ஆசைப்பட்டு இவ்வாறு செய்த நிலையில், காவல்துறையினர் தங்களை அழைத்து வந்து தங்கள் தவறை உணர்த்தியதாக தெரிவித்துள்ளனர். மேலும், காவல் துறையினர் தங்களை சிறார் மன்றங்களில் சேர்த்து தங்கள் வாழ்வை சரியான பாதையில் கொண்டு சேர்க்க வழிவகுப்போம் என உறுதியளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in